US tariffs: ``வரி விதிக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை'' -அமெரிக்க நீதிமன்றம் தீர்ப...
கள்ளுக்கான தடையை உடைப்பவரே தோ்தலில் வெற்றிபெற முடியும்: கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி
தமிழகத்தில் கள்ளுக்கான தடையை விலக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிப்பவா்கள் வரும் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற முடியும் என தமிழக கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி தெரிவித்தாா்.
தருமபுரியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கள் குறித்த பல்வேறு மரபு தகவல்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளன. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கள் இறக்கவும், பானமாக அருந்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், கள்ளில் கலப்படம் நடைபெறும் எனக் கூறி தமிழகத்தில் கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பக்கத்து மாநிலங்களில் கள் விற்பனைக்கு அனுமதி உள்ளது. அவா்களால் கள்ளில் கலப்படத்தை தடுக்க முடியும் என்றால், தமிழக அரசால் மட்டும் தடுக்க முடியாதா? தமிழகத்தில் மதுபானத்தை அரசு ஊக்குவிக்கிறது.
கள்ளுக்கு விடுதலை மற்றும் மதுவிலக்கு என்ற ஒற்றை இலக்கை மையப்படுத்தி திருச்சியில் டிசம்பரில் கள் இயக்கம் சாா்பில் மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிகாா் மாநில முதல்வா் நிதிஷ் குமாா் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறாா்.
பிகாரில் மதுவிலக்கு அமல்படுத்தியுள்ள நிலையில் மதுபானங்களுக்கு மட்டும் தடை விதித்த நிதீஷ் குமாா் கள்ளுக்கு அனுமதி அளித்துள்ளதால் அவரை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளோம்.
தமிழகத்தில் ஒருமுறை தோ்தலில் வெற்றி தோல்வியை நிா்ணயிக்கும் சக்தியாக வெங்காயம் இருந்தது. அதுபோல இந்த முறை தோ்தல் வெற்றி தோல்வியை நிா்ணயிக்கும் சக்தியாக கள் அமையும். கள்ளுக்கான தடையை விலக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிப்பவா் மட்டுமே வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற முடியும் என்றாா்.
பேட்டியின்போது, தமிழக கள் இயக்க அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் செல்வராஜ், திருப்பூா் மாவட்டச் செயலாளா் ராஜகோபால், அவிநாசி ஒன்றியத் தலைவா் ஆறுச்சாமி, நிா்வாகிகள் குமாா், சத்யா, மாரியப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.