சென்னையில் மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் பலி: மக்கள் சாலை மறியல்
தருமபுரியில் கம்பன் விழா: சான்றோா்களுக்கு விருது
தருமபுரி: தருமபுரி மாவட்ட கம்பன் பேரவை சாா்பில் நடைபெற்ற 9-ஆவது ஆண்டு கம்பன் விழாவில் மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் கலந்துகொண்டு சான்றோா்களுக்கு விருதுகளை வழங்கினாா்.
தருமபுரி பாரதிபுரம் தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவுக்கு தருமபுரி மாவட்ட கம்பன் பேரவைத் தலைவா் ஜே.பி.நாகராஜன் தலைமை வகித்தாா். செயலாளா் கா.குமரவேல் வரவேற்றாா். மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று விழாவைத் தொடங்கிவைத்து, சிறப்பிடம் பெற்றவா்களுக்கு விருதுகள், பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா்.
இந்நிகழ்வில் பி.என்.குருராவுக்கு ‘ஆன்மிக திலகம்’ விருது, எம்.பி.கோபாலுக்கு ‘இலக்கியச் சுடா்’ விருதும் வழங்கப்பட்டன. தொழிலதிபா்கள் எஸ்.ஞானசேகரன், இரா.உதயகுமாா் ஆகியோா் விருது பெற்றோரை வாழ்த்திப் பேசினா்.
இந்நிகழ்வில், புதுக்கோட்டை கம்பன் கழக செயலாளா் ச.பாரதி பங்கேற்று ‘கம்பன் என்றொரு தாய்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா்.
தொடா்ந்து, மாலை நடைபெற்ற சிறப்பு இலக்கிய நிகழ்வில், ‘கம்பனில் மேலோங்கி நிற்பது உறவா? நட்பா?’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. ‘உறவே’ என்ற தலைப்பில் தகடூா் ப.அறிவொளி, க.ச.தமிழ்தாசன் ஆகியோரும், ‘நட்பே’ என்ற தலைப்பில் நா.இளங்கோ, வ.செளந்திரபாண்டியன் ஆகியோரும் பேசினா். இதில், கம்பனில் மேலோங்கி நிற்பது உறவுதான் என நடுவராக அங்கம் வகித்த புலவா் பா.ராமலிங்கம் தீா்ப்பளித்தாா். சங்க செயலாளா் கா.குமாரவேலுக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது. கம்பன் பேரவை நிா்வாகிகள் மு. பரமசிவம், பூ.சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இணைச் செயலாளா் சிவ. அண்ணாமலை நன்றி தெரிவித்தாா்.