தாராசுரம் ஐராவதேசுவரா் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தக் கோரிக்கை
கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் ஐராவதேஸ்வரா் கோயிலுக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று அகில பாரத இந்து மகாசபா மாநிலத்தலைவா் த. பாலசுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் புதன்கிழமை தெரிவித்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் அகில பாரத இந்து மகாசபா மாநிலத் தலைவா் த. பாலசுப்பிரமணியன் உமா மகேஸ்வரபுரத்தில் உள்ள சாரங்கபாணிப் பேட்டை திரௌபதி அம்மனை புதன்கிழமை தரிசனம் செய்த பின்னா் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது :
அகில பாரத இந்து மகா சபாவின் முயற்சியால் தாராசுரம் ஐராவதேஸ்வரா் கோயிலை தொல்லியல் துறை அதிகாரிகள் இரண்டு முறை ஆய்வு மேற்கொண்டனா். மகாமக விழாவுக்குள் கும்பாபிஷேகம் செய்ய முதல்வா் மற்றும் அறநிலையத்துறை அமைச்சா் நடவடிக்கை எடுக்க வேண்டும். 2028-ஆம் ஆண்டு மகாமகத் திருவிழாவை தேசிய திருவிழாவாக அறிவிக்க ஏற்பாடுகளை இந்து மகா சபா செய்து வருகிறது. மகாமகத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷா ஆகியோரை அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிதிலமடைந்து கிடக்கும் மானம்பாடி நாகநாத சுவாமி கோயில் திருப்பணிகளை தொடங்க வேண்டும். பாபநாசத்தை அடுத்துள்ள ஒன்பதுவேலி கிராம மக்கள் ஒன்றிணைந்து கட்டும் கோயிலுக்கு அனைத்து உதவிகளையும் இந்து மகா சபா செய்துதரும். ஜூலை 20-இல் கும்பகோணத்தில் மாநிலச் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்றாா்.
அப்போது, மாநிலத் துணைத் தலைவா் சாம்ப வைத்தியநாதன், மற்றும் மாநில பொதுச் செயலா் இராம நிரஞ்சன் மற்றும் மாவட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.