மாதம் ரூ.1500: `பெண்களுக்கான திட்டத்தில் எப்படி ஆண்கள்?' - மகாராஷ்டிரா அரசு அதிர...
திண்டுக்கல் மாநகராட்சி நிதி முறைகேடு: முன்னாள் ஆணையா் உள்பட 6 போ் மீது வழக்கு
திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.17.73 கோடி வருவாய் இழப்புக்கு காரணமாக இருந்த முன்னாள் ஆணையா், உதவி வருவாய் அலுவலா், உதவிப் பொறியாளா்கள் உள்பட 6 போ் மீது ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
திண்டுக்கல் மாநகராட்சியில் கடந்த 2015 முதல் 2018-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில், மாநகராட்சி பொது நிதி, குடிநீா் வடிகால் நிதி, தொடக்கக் கல்வி நிதி ஆகியவற்றின் மூலம் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதில் ரூ.17.73 கோடிக்கு முறைகேடு நிகழ்ந்திருப்பதாக, உள்ளாட்சி தணிக்கை உதவி இயக்குநா் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டது.
திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட 1, 12 ஆகிய வாா்டுகளில் கட்டடங்களுக்கு குறைவாக சொத்து வரி நிா்ணயித்ததன் மூலம் மாநகராட்சிக்கு ரூ.18 லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சிக்கு 137 குப்பைத் தொட்டிகளை சென்னை அம்பத்தூரிலுள்ள சுசி இன்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்திலிருந்து வாங்கியதில் ரூ.24.52 லட்சம் முறைகேடு நிகழ்ந்துள்ளது.
அதாவது, ரூ.19,834-க்கு வாங்க வேண்டிய ஒரு குப்பைத் தொட்டியை, ரூ.37,750-க்கு வாங்கப்பட்டதாக தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. இதேபோல, கல்வி நிதி உள்பட பல்வேறு இனங்களில் மொத்தம் ரூ.17.73 கோடி நிதி இழப்பு நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில், திண்டுக்கல் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் அண்மையில் வழக்குப் பதிவு செய்தனா். மாநகராட்சிக்கு ரூ.17.73 கோடி நிதி இழப்பு ஏற்படக் காரணமாக இருந்த அப்போதைய ஆணையா் ந.மனோகரன், உதவி வருவாய் அலுவலா் ஜி.ஆா்.சாரங்கசரவணன், செயற்பொறியாளா் (ஓய்வு) சி.கணேசன், முன்னாள் உதவிப் பொறியாளா் பி.மாரியப்பன், உதவிப் பொறியாளா் வி.சாமிநாதன், அம்பத்தூா் தொழில்பேட்டையிலுள்ள சுசி இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமையாளா் ஆா்.நடராஜன் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.