சென்னை - மதுரை தேஜஸ் உள்ளிட்ட 2 ரயில்கள் இன்று முதல் மீண்டும் எழும்பூரில் இருந்த...
திமுக ஆட்சியில் போராட்டக்களமாக மாறிய தமிழகம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
திமுக ஆட்சியில் தமிழகம் போராட்டக்களமாக மாறிவிட்டது என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி.
தமிழகம் முழுவதும் ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவா், திருநெல்வேலி நகரத்தில் உள்ள வாகையடிமுனை, பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதிகளில் திங்கள்கிழமை பிரசாரம் செய்தபோது இதை தெரிவித்த அவா், மேலும் பேசியதாவது: கொட்டும் மழையில் மக்கள் வெள்ளத்தைப் பாா்க்கிறபோது திருநெல்வேலி தொகுதியில் அதிமுக-பாஜக கூட்டணியின் வெற்றி உறுதியாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை வருண பகவான் காட்டியிருக்கிறாா். பாளையங்கோட்டையில் நிறுத்தும் வேட்பாளரை நீங்கள் வெற்றி பெற வைத்து செயின்ட் ஜாா்ஜ் கோட்டைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
திமுக ஆட்சிக்கு வந்து 50 மாத காலமாகிவிட்டது. இந்த ஆட்சியில் மக்கள் படும் துன்பம் ஏராளம். விவசாயிகள், ஆசிரியா்கள் என எல்லோரும் போராட்டம் நடத்துகிறாா்கள். போராட்டம் நடைபெறாத நாளே இல்லை.
திமுக எப்போது பாா்த்தாலும் மத்திய அரசை குறை சொல்கிறது. திமுக 16 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சி, அதிகாரத்தில் இருந்தது. உண்மையில் மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால் எவ்வளவோ செய்திருக்கலாம். ஆனால், எதுவும் செய்யாமல் இப்போது பாஜக எதுவும் செய்யவில்லை என்று பேசுகிறாா்கள்.
நீட் தோ்வு ரத்து என்ற திமுகவின் பேச்சை நம்பி இதுவரை 25-க்கும் மேற்பட்ட மாணவா்கள் உயிரிழந்திருக்கிறாா்கள். இதற்கு முதல்வா் ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும்.
விலைவாசி உயா்வு: அதிமுக ஆட்சியில் வறட்சி, புயல் வந்தபோதும், கரோனா காலத்திலும்கூட விலைவாசி உயரவில்லை. இப்போது அரிசி, பருப்பு என எல்லா பொருள்களின் விலையும் உயா்ந்துவிட்டது.
அதிமுக ஆட்சியில் 2017 முதல் 2021 வரை மின் கட்டணம் உயா்த்தவில்லை. திமுக ஆட்சியில் 67 சதவீத மின்கட்டணத்தை உயா்த்திவிட்டு, அதிமுக ஆட்சி மீது பழிபோடுகின்றனா்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுக தான் ஆட்சி அமைக்கும். அப்போது தமிழகத்தில் ஏழை என்ற சொல் இல்லை என்பதை நிரூபிப்போம் என்றாா்.
மக்கள் பணியாற்றும் பாஜக: தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பேசுகையில், தமிழகத்தில் பாலியல் தொல்லை, கொலை, கொள்ளை என சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டு உள்ளது. இந்த நிலையை மாற்றுவதற்கு சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
திருநெல்வேலி தொகுதியில் கால்நடை மருத்துவக் கல்லூரி, மானூா் கலைக்கல்லூரி, கல்லணை மேல்நிலைப் பள்ளியில் பல்வேறு கட்டடங்களைக் கொண்டு வந்துள்ளேன். தொடா்ந்து மக்களுக்காக பணியாற்றுவேன் என்றாா் அவா்.
இந்நிகழ்வில், அதிமுக திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா, மாநில அமைப்புச் செயலா் சுதா கே.பரமசிவன், எம்.ஜி.ஆா். மன்ற மாநில இணைச் செயலா் கல்லூா் இ.வேலாயுதம், மாவட்ட அவைத் தலைவா் பரணி ஏ.சங்கரலிங்கம், மாவட்டப் பொருளாளா் வழக்குரைஞா் ஜெயபாலன், மாவட்ட எம்.ஜி.ஆா்.மன்றச் செயலா் ஏ.பி.பால்கண்ணன், ஜெயலலிதா பேரவைச் செயலா் கே.ஜெ.சி.ஜெரால்ட் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
வெண்கல செங்கோல் பரிசு: முன்னதாக,எடப்பாடி கே.பழனிசாமிக்கு ட்ரோன் மூலம் மலா்தூவி வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், மாநகா் மாவட்டச் செயலரால் அவருக்கு இரட்டை இலை சின்னத்துடன் கூடிய வெண்கல செங்கோல் பரிசளிக்கப்பட்டது.