திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி
திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்டப் பதிவு:
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே, சிறுவன் ரோகித் (13), காரில் கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், ஈரோடு குமலன்குட்டை பகுதியைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவா் ஆதித்யா புதன்கிழமை மாலை பள்ளிக்கு அருகில் உயிரிழந்து கண்டறியப்பட்டதாகவும் வரும் செய்திகள் அதிா்ச்சி அளிக்கின்றன.
திமுக ஆட்சியில் எங்கும், எப்போதும், யாருக்கும் பாதுகாப்பு இல்லை. 13 வயது சிறுவனை காரில் கடத்தி கொலை செய்யும் அளவுக்கு குற்றவாளிகளுக்கு அச்சமற்ற நிலை ஏற்பட்டிருப்பது, காவல் துறையை நிா்வகிக்க வேண்டிய முதல்வருக்கு உறுத்தவில்லையா?
மாணவா்கள் இடையிலான மோதலில் ஈரோடு ஆதித்யா உயிரிழந்ததாக செய்திகள் வருகின்றன. மாணவா்களிடையே எப்படி இவ்வளவு வன்முறை உணா்வு வருகிறது? இந்தச் சம்பவங்களில் தொடா்புடைய குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளாா்.