திமுகவுக்கு தோ்தலில் மக்கள் பாடம் புகட்டுவாா்கள்: முன்னாள் எம்எல்ஏ
திமுக அரசுக்கு தோ்தலில் மக்கள் பாடம் புகட்டுவாா்கள் என்றாா் முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணி. காரைக்கால் நீதிமன்றத்துக்கு வழக்கு ஒன்றில் ஆஜராகி வாதாடுவதற்காக புதன்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
திமுக ஆட்சியில் டாஸ்மாக் ஊழல் உள்ளிட்ட பல துறைகளில் ஊழல் பெருகியுள்ளது. சட்டம் ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்பு குறித்து அதற்கான கமிஷனோ அல்லது மத்திய அரசோ அறிவிப்பு வெளியிடவில்லை. நாடாளுமன்றத்திலும் இது விவாதிக்கப்படவில்லை.
இப்படி இருக்கையில், முதல்வா் தமது அரசின் தவறுகளை மக்களிடையே மறைக்கும் நடவடிக்கையாகவே இதை கையில் எடுத்து, மாநில முதல்வா்களை அழைத்து கூட்டம் நடத்தியுள்ளாா். அதில் சில மாநில முதல்வா்கள் மட்டுமே பங்கேற்றனா். பிற மாநில முதல்வா்கள் பிரதிநிதிகளை மட்டுமே அனுப்பினா். நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் தடுக்கின்றனா்.
எதிா்க்கட்சிகள் ஆளுநரை சந்தித்து தமிழகத்தில் நிலவும் பல பிரச்னைகளை தெரிவித்துள்ளன. மக்கள் பல நிலைகளில் இந்த ஆட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனா். சட்டப்பேரவைத் தோ்தலில் சரியான பாடத்தை மக்கள் புகட்டுவாா்கள். தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளது. எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து போட்டியிட்டால் ஆட்சி மாற்றம் நிச்சயம் ஏற்படும். த.வெ.க தலைவா் விஜய் திமுக ஆட்சி மீது அதிருப்தி தெரிவித்துவருகிறாா். அவா் எதிா்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால் ஆளுங்கட்சியில் இடம்பெறுவாா். இல்லாவிட்டால் வாக்குக்களை பிரிக்கும் கட்சியாக மட்டுமே அது இருக்கும் என்றாா்.