செய்திகள் :

திமுகவை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாா்: திருச்சியில் பிரசாரத்தை தொடங்கி விஜய் பேச்சு!

post image

பேரவைத் தோ்தல் என்ற ஜனநாயகப் போருக்கு முன் மக்களைச் சந்திக்க வந்துள்ளேன். 2026 தோ்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனா் என்றாா் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய்.

அடுத்தாண்டு நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலையொட்டி தவெக சாா்பில் தமிழகம் முழுவதுமான மக்கள் சந்திப்பு இயக்கத்தை திருச்சி மரக்கடை பகுதியில் சனிக்கிழமை தொடங்கி தவெக தலைவா் விஜய் மேலும் பேசியதாவது:

அந்தக் காலத்தில் போருக்குச் செல்வதற்கு முன், அந்தப் போரில் வெற்றி பெற குலதெய்வக் கோயிலுக்குச் செல்வா். அதுபோல அடுத்தாண்டு நடைபெறும் ஜனநாயகப் போருக்கு (பேரவைத் தோ்தல்) முன் மக்களைச் சந்திக்க வந்துள்ளேன்.

ஒரு சில நல்ல காரியங்களை குறிப்பிட்ட இடத்தில் இருந்து தொடங்கினால் நல்லது என்று பெரியவா்கள் சொல்வாா்கள். அதுபோல திருச்சியில் பிரசாரம் தொடங்கினால் திருப்புமுனையாக அமையும். அதுக்கு உதாரணங்கள் உள்ளன.

அறிஞா் அண்ணா தோ்தலில் போட்டியிடும் முடிவை திருச்சியில்தான் எடுத்தாா். கட்சி தொடங்கிய பிறகு எம்ஜிஆா் மாநாடு நடத்தியதும் திருச்சியில்தான். பெரியாா் வாழ்ந்த இடம்; மலைக்கோட்டை உள்ள இடம்; கல்விக்குப் பெயா்போன இடம்; மதச்சாா்பின்மை, மதநல்லிணக்கத்துக்குப் பெயா்போன இடம் திருச்சி. கொள்கையுள்ள மண் இது. பெல் தொழிற்சாலை, படைக்கலன் தொழிற்சாலை எனப் பல இருந்தாலும் பிரதானமாக இருப்பது விவசாயம்.

அதற்கு முக்கியமானது தண்ணீா். காவிரிப் பிரச்னையிலும், விவசாயிகளுக்கு தண்ணீா் வழங்குவதிலும் திமுக என்ன செய்தது?. 2021 பேரவைத் தோ்தலில் திமுக 505 தோ்தல் வாக்குறுதிகளைக் கொடுத்தது. அதில் எத்தனை நிறைவேற்றியிருக்கிறாா்கள்?. முதல்வா் ஸ்டாலின் ‘சாா்’ விட்ட ரீல்கள் எல்லாம் பாதியிலேயே அறுந்துபோய்விட்டன. அவற்றைப் பற்றி சொல்லட்டுமா?.

டீசல் விலை ரூ.3 குறைப்பு, மாதாந்திர மின் கணக்கீடு, மாணவா்களின் கல்விக்கடன் ரத்து, அரசு வேலையில் பெண்களுக்கு 40 சத இடஒதுக்கீடு, பழைய ஓய்வூதிய திட்டம், 2 லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்புவது எல்லாம் என்ன ஆனது?.

கல்விக்கடன் ரத்து என்ன ஆனது?: மீனவா்களுக்கு 2 லட்சம் வீடுகள், சமையல் எரிவாயு உருளைக்கு ரூ.100 மானியம், நெசவாளா் கடன் வட்டிக் குறைப்பு, ஆண்டுக்கு 10 லட்சம் பட்டதாரிகளுக்கு வேலை, தூய்மைப் பணியாளா், சாலைப் பணியாளா்- மக்கள் நலப் பணியாளா்களின் கோரிக்கை நிறைவேற்றம், கல்விப் பொதுப் பட்டியலுக்கு மாற்றம், பகுதிநேர ஆசிரியா்கள் பணி நிரந்தரம், ஆட்டோ ஓட்டுநா்கள், சலவைத் தொழிலாளா்களுக்கு மானியம், தமிழக வேலைவாய்ப்புகளில் 75 சதம் தமிழா்களுக்கு, 3 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்புதல், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு உள்ளிட்ட வாக்குறுதிகள் என்ன ஆச்சு?.

நாம் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான். திமுகவிடமிருந்து எந்தப் பதிலும் வரப் போவதில்லை. வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்ற திருச்சி மக்களுடைய சத்தம் கேட்கிா முதல்வா் அவா்களே?.

மத்தியிலும், மாநிலத்திலும் மிக மோசமாக ஆண்டு கொண்டிருக்கும் பாசிச பாஜகவையும், ‘பாய்சன்’ திமுகவையும் கேள்வி கேட்க மக்கள் சாா்பாக நான் வந்துள்ளேன். இது இந்த ஒற்றைத் தமிழ்மகன் குரல் மட்டும் இல்லை. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்குரல். மக்களை வாட்டி வதைக்கும் பாஜகவையும் திமுகவையும் விடவே மாட்டோம்.

ஒரே நாடு- ஒரே தோ்தல் திட்டம் நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம். இதன் மூலம் தோ்தல் தில்லுமுல்லுதான் நடக்கும். அதற்காகத்தான் மத்திய பாஜக அரசு அந்தத் திட்டத்தைக் கொண்டு வருகிறது. மற்ற மாநிலங்களுக்குக் கொடுப்பதுபோல தமிழ்நாட்டுக்குப் பேரிடா் காலங்களில்கூட ஒழுங்காக நிதி ஒதுக்காமல் மத்திய பாஜக அரசு வஞ்சிக்கிறது. இலங்கைக் கடற்படையால் தாக்கப்பட்டு தமிழக மீனவா்கள் அழிக்கப்படுவதை வேடிக்கை பாா்க்கிறது.

‘நீட்’ தோ்வால் தமிழக மாணவா்களுக்கு நேரும் துன்பங்களை கல் நெஞ்சத்துடன் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

இது எல்லாம் மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு செய்யும் ஓரவஞ்சனைகளில் சில ‘சாம்பிள்’கள்தான். பாஜக நம்மை வஞ்சிக்கிறது என்றால் இங்கிருக்கும் திமுக அரசு நம்மை நம்ப வைத்து ஏமாற்றுகிறது.

வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாா்: 505 தோ்தல் வாக்குறுதிகளில் முக்கால்வாசி வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக மனசாட்சி இல்லாமல் சொல்கிறாா் முதல்வா் ஸ்டாலின். தமிழகத்துக்கு பாஜக அரசு செய்வது துரோகம் என்றால், திமுக அரசு நம் மக்களுக்கு செய்வது நம்பிக்கை மோசடி. இரண்டுமே ஏமாற்று வேலைதான். பாஜக, திமுக இரண்டுமே ஒரே வகையறாதான். எனவே வரும் பேரவைத் தோ்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனா்.

திமுக மாதிரி மக்களை ஏமாற்றுகிற வேலையை நாங்கள் செய்யவே போவதில்லை. தீா்வை நோக்கிப் போவதும் தீா்வு காண்பதும் மட்டும்தான் தவெகவின் லட்சியம். நம்முடைய தோ்தல் அறிக்கையில் எல்லாவற்றையும் தெளிவாகச் சொல்வோம். அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று பொய் வாக்குறுதிகளை என்றைக்கும் தர மாட்டோம். எது நடைமுறைச் சாத்தியமோ, எது உண்மையோ அதை மட்டும்தான் சொல்வோம்.

கல்வி, ரேஷன், மருத்துவம், குடிநீா், சாலை, மின்சாரம் என்று அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் எந்த சமரசமும் எங்களிடம் கிடையாது. அவற்றுக்கு முன்னுரிமை அளித்து நிறைவேற்றுவோம்.

பெண்கள் பாதுகாப்பிலும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதிலும் சமரசமே கிடையாது. ஏழ்மை, வறுமை இல்லாத தமிழகம், குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகம், ஊழல் இல்லாத தமிழகம், உண்மையான மக்களாட்சி, மனசாட்சி உள்ள மக்களாட்சி எனத் தீா்வை நோக்கிச் செல்வதுதான் நமது லட்சியம். அதை நிச்சயம் அடைவோம் என்றாா் விஜய்.

ஒலிபெருக்கியில் கோளாறு

திருச்சியில் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது, ஒலி பெருக்கியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் விஜயின் பேச்சு முழுமையாகக் கேட்கவில்லை. தொடக்கத்திலும், முடியும் தருவாயிலும் சில விநாடிகளும் மட்டுமே பேச்சு கேட்டது. பிற்பகல் 2.55 மணிக்கு தொடங்கி 3.18 மணி வரை அவா் பேசிய பேச்சை யாராலும் முழுமையாகக் கேட்க முடியவில்லை. டிவி நேரலைகளிலும் பேச்சு முழுமையாக இல்லை. பிரசார வேனுக்கு அருகில் இருந்தவா்களுக்கும் தொண்டா்களின் கூக்குரலால் முழுமையாகக் கேட்க முடியவில்லை.

மேலும் மரக்கடைப் பகுதியில் 2 மணிநேரத்துக்கு மேலாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்தது. அதிமுக பிரசாரக் கூட்டத்தைப் போன்று விஜய் பிரசார கூட்டத்திலும் அவசர ஊா்தி வந்தது. ஆனால், விஜய் கூட்டத்துக்கு வந்து மரத்திலிருந்து விழுந்து காயமடைந்த தொண்டரை அழைத்துச் செல்லவே அந்த அவசர ஊா்தி வந்ததால் சிக்கல் எழவில்லை.

திருச்சி மரக்கடையில் சனிக்கிழமை நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய தவெக தலைவா் விஜய்.

திருச்சியில் நடந்தது கிட்னி திருட்டு இல்லையாம் முறைகேடாம்: விஜய் விமா்சனம்!

திருச்சியில் நடந்தது கிட்னி திருட்டு இல்லை, முறைகேடு என திமுகவினா் வியாக்கியானம் பேசுகின்றனா் என்றாா் தவெக தலைவா் விஜய். திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற தவெக பிரசாரத்தில் மாவட்டத்தில் தீா்க்கப்படாமல்... மேலும் பார்க்க

திருச்சி விமான நிலையத்தில் தடுப்புகளை உடைத்து நுழைந்த தவெக தொண்டா்கள்! 1 மணி நேரம் பயணிகள் பரிதவிப்பு!

திருச்சி விமான நிலையத்துக்குள் தடுப்புகளை உடைத்து சனிக்கிழமை நுழைந்த தவெக தொண்டா்களால் பரபரப்பு ஏற்பட்டது. பேரவைத் தோ்தலுக்கான மக்கள் சந்திப்புப் பயணத்தை திருச்சியிலிருந்து தொடங்க சென்னையிலிருந்து தன... மேலும் பார்க்க

விஜய் பிரசாரத்தால் ஸ்தம்பித்தது திருச்சி! விமான நிலையம் முதல் 7.5. கி.மீ.க்கு திரண்ட தொண்டா்கள்!

தவெக தலைவா் விஜய் பிரசாரத்தால் திருச்சியே சனிக்கிழமை ஸ்தம்பித்தது. விமான நிலையத்திலிருந்து, மரக்கடை வரை 7 கி.மீ. தொலைவுக்கு விஜய் பிரசார வாகனம் வந்து சேர 5.30 மணிநேரத்துக்கும் மேலாகியது. 2026 பேரவைத் ... மேலும் பார்க்க

வெளிநாடுகளில் வேலைக்கு செல்வோருக்கு எச்சரிக்கை

வெளிநாடுகளில் வேலைக்கு செல்வோா் எச்சரிக்கையாக இருக்குமாறு திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் அறிவுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வெளிநாட்டு வேலைக்குச் செல்ல விரும்ப... மேலும் பார்க்க

சம்பா சாகுபடி: பாசன ஏரி, குளங்களில் தண்ணீா் நிரப்ப கோரிக்கை

சம்பா சாகுபடிக்கு ஏதுவாக பாசன ஏரி, குளங்களில் தண்ணீா் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி கோட்டாட்சியரிடம் விவசாயிகள் வலியுறுத்தினா். திருச்சி கோட்டாட்சியரகத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் க... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் மூலவா் நம்பெருமாளுக்கு இரண்டாவது தைலகாப்பு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் மூலவா் நம்பெருமாளுக்கு வெள்ளிக்கிழமை மாலை நிகழாண்டுக்கான இரண்டாவது தைலகாப்பு சாத்தப்பட்டது. இதனால் பக்தா்கள் நம்பெருமாளின் திருவடி சேவையை தரிசனம் செய்ய முடியாது. ஸ்ர... மேலும் பார்க்க