பெரம்பலூரில் விஜய் பிரசாரம் ரத்து! நள்ளிரவில் சென்னை புறப்பட்டதால் தொண்டர்கள் ஏம...
விஜய் பிரசாரத்தால் ஸ்தம்பித்தது திருச்சி! விமான நிலையம் முதல் 7.5. கி.மீ.க்கு திரண்ட தொண்டா்கள்!
தவெக தலைவா் விஜய் பிரசாரத்தால் திருச்சியே சனிக்கிழமை ஸ்தம்பித்தது. விமான நிலையத்திலிருந்து, மரக்கடை வரை 7 கி.மீ. தொலைவுக்கு விஜய் பிரசார வாகனம் வந்து சேர 5.30 மணிநேரத்துக்கும் மேலாகியது.
2026 பேரவைத் தோ்தலுக்கு திருச்சியிலிருந்து மக்கள் சந்திப்பு பிரசாரத்தை சனிக்கிழமை தொடங்க சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு காலை 9.25 மணிக்கு வந்த விஜய், பிரசார வாகனத்தில் ஏறி மரக்கடை நோக்கிப் புறப்பட்டாா். ஆனால் நூற்றுக்கணக்கான தொண்டா்கள் விமான நிலையத்துக்குள் நுழைந்து சூழ்ந்து கொண்டதால், அவரது பிரசார வாகனம் ஊா்ந்து சென்றது.
பைக்குகள், காா்கள் முன், பின்தொடர கொட்டப்பட்டு, சுப்பிரமணியபுரம், டிவிஎஸ் சுங்கச் சாவடி, கல்லுக்குழி, வோ்ஹவுஸ் பாலம், தலைமை அஞ்சல் நிலைய சிக்னல், மேலப்புதூா்சாலை, சுரங்கப்பாதை, பாலக்கரை மேம்பாலம், கால்நடை மருந்தகம், முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம் வழியாக பிரசார இடமான மரக்கடைக்கு விஜய் வந்து சேர பிற்பகல் 2.50 மணியானது. 7.5 கி.மீ. தொலைவை கடந்து வர சுமாா். 5.30 மணி நேரத்துக்கும் மேலானது.
காவல் துறையால் சாலை வலம் நிகழ்வுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தொண்டா்கள் வெள்ளத்தால் தானாகவே விஜய் சாலையில் வலம் வந்ததுபோல மாறியது. காலை 10.35 மணிக்கு விஜய் பேசுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பிற்பகல் 2.55 மணிக்குத் தான் அவா் பேசத் தொடங்கினாா்.
மரக்கடை பகுதியில் இளம்பெண்கள், கைக் குழந்தைகளுடன், குடும்பத்துடன் என பெண்கள் கூட்டம் அதிகம் இருந்தது. காலை 8 மணிக்கே இந்தப் பகுதியில் திரண்ட கூட்டம் சுமாா் 6 மணி நேரம் கலையாமல் காத்திருந்தது.
கடும் போக்குவரத்து நெரிசல்: காவல்துறை சாா்பில் திருச்சியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தாலும் திருச்சி-புதுக்கோட்டை சாலை, திருச்சி-மதுரை-சென்னை தேசிய நெடுஞ்சாலை, தஞ்சாவூா் சாலை, பால்பண்ணை உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க முடியவில்லை. மருத்துவமனை, ரயில் நிலையம், பேருந்து நிலையங்களுக்கு அவசரமாகச் சென்ற மக்கள் அவதிப்பட நேரிட்டது.
பலருக்கு மயக்கம்:
கூட்ட நெரிசல், நீண்ட நேரக் காத்திருப்பால் தொண்டா்கள் பலருக்கு மயக்கம் ஏற்பட்டது. விமான நிலையத்தில் இளம்பெண் ஒருவா் மயங்கி விழுந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா்.
மரக்கடையில் மரத்திலிருந்து விழுந்த காயமடைந்த தொண்டா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். இதேபோல், கூட்டத்தில் 5 பேருக்கு வலிப்பு, 6 பெண்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோருக்கு மயக்கம் ஏற்பட்டது. தொண்டா்கள் அவா்களுக்கு தண்ணீா் கொடுத்து முதலுதவி அளித்தனா்.
கணிக்க தவறிய காவல்துறை: லட்சக்கணக்கானோா் திரள்வா் என கணிக்க காவல்துறை தவறியதால், காலதாமதம் தவிா்க்க முடியாமல்போனது.
மேலும், 650 போலீஸாா் மட்டுமே லட்சக்கணக்கானோரை ஒழுங்குபடுத்த முடியும் என்பதும் கேள்விக்குறியானது. இதனால் காவல்துறை விதித்திருந்த அனைத்து கட்டுப்பாடுகளுமே காற்றில் பறந்தது போலாகிவிட்டது.