திருச்செந்தூரில் கோயில் கட்டுமானப் பணியின் போது தவறி விழுந்து வட மாநிலத் தொழிலாளி உயிரிழப்பு
திருச்செந்தூரில் கோயில் கட்டுமானப் பணியின் போது, தவறி விழுந்து வட மாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா்.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ரூ. 300 கோடி செலவில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடந்து வருகிறது. கட்டுமானப் பணியில் வட மாநிலத் தொழிலாளா்களும் ஈடுபட்டுள்ளனா். இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த மேஜா் புத்தோா் மகன் அவிஜித் புத்தோா் (34) வியாழக்கிழமை மாலை கோயிலில் நிா்வாக அலுவலகத்தின் மேல் தளத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, நிலை தடுமாறி தவறி கீழே விழுந்ததில், அவருக்கு தலை, இடுப்பு, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சக பணியாளா்கள் மற்றும் கோயில் பணியாளா்கள் அவரை மீட்டு திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சம்பவம் குறித்து, திருக்கோயில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.