எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 3,496 பாராமெடிக்கல் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
திருச்செந்தூா் அருகே தோட்டங்களில் தீ! வாழை, தென்னை மரங்கள் நாசம்
திருச்செந்தூா் அருகே உள்ள காயாமொழி, தளவாய்புரம், புதூா் ஆகிய கிராமங்களில் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் வாழை ,தென்னை, பனை, முருங்கை விவசாயம் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுமாா் 2.30 மணி அளவில் தளவாய்புரம்-காயாமொழி சாலையோரத்தில் உள்ள தென்னை மரங்களில் மின்சார கம்பிகள் உரசியதில் தீப்பிடித்தது.
இதையடுத்து, திருச்செந்தூா், ஏரல் தீயணைப்புத் துறையினா் சுமாா் 3 மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். அப்போது காற்றின் வேகம் காரணமாக, அடுத்தடுத்த தோட்டங்களிலும் தீ பரவியது.
இதில் முதலூா் அருகே உள்ள பொத்தங்காலன்விளையை சோ்ந்த மங்கள சேவியா்(53) என்பவருக்கு சொந்தமான 17 ஆயிரம் வாழைகள் தீயில் முற்றிலும் கருகின. மேலும் தளவாய்புரம்-நடுநாலுமூலைக்கிணறு இடையே 40 ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்ட முருங்கை மரங்களும், தளவாய்புரத்தைச் சோ்ந்த ஆதிஜெகுரு (65) என்பவரின் தோட்டத்தில் ஆயிரம் தென்னை மரங்களும் தீயில் கருகின. மாலை வரை தீப்பற்றி எரிந்ததில் மொத்தம் 30 ஆயிரம் வாழை மரங்கள், 5 ஆயிரம் தென்னை மரங்கள், 2 ஆயிரம் பனை மரங்கள், 5 ஆயிரம் முருங்கை மரங்கள் தீயில் கருகி நாசமாகின.
சாலையோர தோட்டங்களில் தீப்பிடித்ததால் சாலை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் தளவாய்புரம்-காயாமொழி இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.