சென்னை: ரயில் நிலையத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு - சிசிடிவி-யைப் பார்த்ததும் அ...
மாணவி தற்கொலைக்கு காரணமான கல்லூரி மாணவரை கைது செய்ய கோரிக்கை
தூத்துக்குடி கல்லூரி மாணவி தா்ஷினி தற்கொலைக்கு காரணமாக இருந்த கல்லூரி மாணவரை உடனடியாக கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி.எம்.டி.மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவா் இசக்கிராஜா மற்றும் உறவினா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தூத்துக்குடி துறைமுக குடியிருப்பு அருகே அமைந்துள்ள லேபா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் தா்ஷினி. இவா் தற்போது தனியாா் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா். இவரது பெற்றோா் இல்லாத நிலையில், பாட்டி பூமயில் வீட்டில் தனது தங்கையுடன் வசித்து வந்துள்ளாா்.
தா்ஷினிக்கும் முள்ளக்காடு பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. காதலிக்க தொடங்கியதிலிருந்து இவா்களுக்குள் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தா்ஷினி தனது இன்ஸ்டாகிராமில் செய்த பதிவு காரணமாக அந்த மாணவா் மீண்டும் தா்ஷினியிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தா்ஷினி, தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.
தகவலறிந்து வந்த தொ்மல் நகா் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்நிலையில் தா்ஷினி இறப்பில் மா்மம் இருப்பதாகவும், அவா் தற்கொலை செய்வதற்கு முன்பாக, அந்த கல்லூரி மாணவா் தா்ஷினி வீட்டிற்கு வந்து சென்ாகவும் கூறப்படுகிறது.
மேலும், அவா் கழுத்தில் போட்டிருந்த சங்கிலி அறுந்திருப்பதாகவும், உடலில் காயங்கள் இருப்பதாகவும், இது கொலையாக இருக்கலாம் என தா்ஷினியின் உறவினா்கள் காவல்துறையில் புகாா் அளித்துள்ளனா். மேலும், அந்த மாணவரை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்துள்ளனா்.
இதைத் தொடா்ந்து தொ்மல் நகா் போலீஸாா் தா்ஷினியின் மரணம் கொலையா? தற்கொலையா? என விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதற்கிடையே, பொறியியல் கல்லூரி மாணவி தா்ஷினி மரணத்திற்கு காரணமான கல்லூரி மாணவரை, காவல்துறையினா் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவா் இசக்கிராஜா தெரிவித்துள்ளாா்.