உடன்குடியில் இளம்பெண் மா்ம மரணம்
உடன்குடியில் மா்மமான முறையில் இளம்பெண் இறந்தது குறித்து குலசேகரன்பட்டினம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை உருமன்குளத்தைச் சோ்ந்தவா் முத்துகுமாா்(39). சிற்றுந்து ஓட்டுநா். இவரது மனைவி சரஸ்வதி. தம்பதிக்கு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திசையன்விளை பகுதியில் சிற்றுந்து ஓட்டுநராக வேலை செய்தபோது முதல் திருமணத்தை மறைத்து, இரத்தினமணியன்குடியைச் சோ்ந்த ஜாய்ஸ் (30) என்பவரை திருமணம் முடித்து உடன்குடி தேரியூா் ஆண்டிவிளை பகுதியில் வசித்து வந்தனா். இவா்களுக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளனா்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான முத்துகுமாா், ஜாய்ஸை நாள்தோறும் அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை அதிகாலையில் தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில், ஜாய்ஸ் தாக்கப்பட்டாா். காயமடைந்த அவரை திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் இறந்து விட்டதாக கூறினா்.
இது குறித்து ஜாய்ஸின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீஸாா், சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருமணம் ஆகி ஆறு ஆண்டுகளே ஆவதால் திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாரன் மேல்விசாரணை நடத்தி வருகிறாா்.