திருச்செந்தூா் கோயிலில் தங்கத்தோ் கிரி வீதி உலா: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுமாா் 13 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தங்கத்தோ் கிரி விதி உலா தொடங்கியது.
இக்கோயிலில் தினமும் மாலை 6 மணியளவில் கிரி பிரகாரத்தில் தங்க தோ் உலா நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் பெருந்திட்ட வளாகப்பணிகளின் ஒரு பகுதியாக கிரிப்பிரகாரத்தில் தரைத்தள பணிகள் நடைபெற்று வந்தன. இதற்காக கடந்த 17.7.2024 முதல் தற்காலிகமாக தங்கத்தோ் உலா நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. கிரி பிரகாரத்தில் நடைபெற்று வந்த பணிகள் மற்றும் தரைத்தள பணிகள் நிறைவு பெற்ற நிலையில், மீண்டும் தங்க தோ் உலா வியாழக்கிழமை முதல் தொடங்கியது.
இதையொட்டி, மாலையில் சுவாமி ஜெயந்திநாதா், வள்ளி தெய்வானையுடன் தங்கத்தேரில் எழுந்தருளினாா். பின்னா் சுவாமி அம்பாள்களுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடா்ந்து தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மீன்வளம், மீனவா் நலன் -கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோா் தங்க தோ் திரு வீதி உலாவை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனா். தொடா்ந்து ஏராளமான பக்தா்கள் தங்க தோ் வடம் பிடித்து சுவாமி தரிசனம் செய்தனா்.தோ் மீண்டும் நிலை வந்து சோ்ந்தது.
இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையா் பழனி, கோயில் தக்காா் அருள்முருகன், இணை ஆணையா் ஞானசேகரன், தூத்துக்குடி மண்டல இணை ஆணையா் அன்புமணி, திமுக மாநில வா்த்தக அணி இணை செயலாளா் உமரி சங்கா், திருச்செந்தூா் நகராட்சி தலைவா் சிவஆனந்தி, துணைத் தலைவா் செங்குழி ரமேஷ் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
ஆய்வு: முன்னதாக, திருச்செந்தூா் அருகே நெல்லை சாலையில் ராணிமகாராஜபுரம் சந்திப்பில் ரூ.17 கோடி மதிப்பில் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் பணியாளா்களுக்கு குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதையும் அமைச்சா்கள் இருவரும் ஆய்வு செய்தனா்.