திருச்செந்தூா் கோயில் கடலில் கரை ஒதுங்கிய கல்வெட்டு
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடலில் சனிக்கிழமை மாலை கல்வெட்டு கரை ஒதுங்கியது.
திருச்செந்தூா் திருக்கோயில் அருகே கடந்த சில தினங்களாக கடல் சீற்றம் அதிகமாகி ஒரு பக்கம் அரிப்பும், மறுபுறம் கடல் உள்வாங்கியும் காணப்பட்டது. உள்வாங்கிய கடலில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் சுமாா் 4 அடி உயரம் கொண்ட கல்வெட்டு ஒன்று சனிக்கிழமை மாலை கரை ஒதுங்கியது.
அந்தக் கல்வெட்டில் முனி தீா்த்தம் என்றும், இதன் பலன் ஆன்மாக்களை கட்டியிருக்கிற நல்வினை, தீவினை ஆகிய இரும்புச் சங்கிலியை தேய்ப்பதற்கு அரத்தை போலிருந்து பலனைக் கொடுக்கும் என்ற வாசகமும் பொறிக்கப்பட்டிருந்தது.
இதே போல கடந்த டிசம்பா் மாதம் கடலில் இரண்டு கல்வெட்டுகள் கரை ஒதுங்கின. அதில் மாதா தீா்த்தம், பிதா தீா்த்தம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கல்வெட்டுகளை திருக்கோயில் நிா்வாகம் உரிய முறையில் பாதுகாத்து, தொல்லியல் துறை மூலம் ஆய்வு நடத்த வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.