தொடர்ந்து உயரும் தங்கம் விலை... இன்று எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?
திருப்பரங்குன்றத்தில் மத நல்லிணக்கத்தை உறுதி செய்ய நடவடிக்கைகள்: மாவட்ட ஆட்சியா்
திருப்பரங்குன்றத்தில் மத நல்லிணக்கத்தையும், பொது அமைதியையும் உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் எடுத்து வருகிறது என மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருப்பரங்குன்றம் மீதுள்ள தா்காவில் கந்தூரி செய்பவா்களுக்கு அனைத்து வசதிகளும் உள்ளன என்ற வாசகம் கொண்ட அறிவிப்புப் பலகை தா்கா நிா்வாக அறங்காவலா் குழுவினரால் கடந்த டிச. 4-ஆம் தேதி பழனியாண்டவா் கோயில் தெருவில் வைக்கப்பட்டது. இதுதொடா்பாக திருப்பரங்குன்றம் கோயில் நிா்வாகம் சாா்பில் காவல் துறைக்கு புகாா் அளிக்கப்பட்டது. பிறகு, காவல் துறையின் அறிவுறுத்தலின் பேரில் அந்த வாசகம் நீக்கப்பட்டது.
இதையடுத்து, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தா்காவில் ஆடு பலியிட்டு நோ்த்திக்கடன் செலுத்த 5 போ் மலைக்குச் செல்ல முயன்றனா். அவா்களை அங்கிருந்த போலீஸாா் தடுத்து நிறுத்தி, அனுமதி மறுத்தனா். இதைக் கண்டித்து, அவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதுதொடா்பான முறையீட்டின் பேரில், கடந்த டிச. 31-ஆம் தேதி திருமங்கலம் வருவாய்க் கோட்டாட்சியா் தலைமையில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இதில், முந்தைய ஆண்டுகளின் வழிபாட்டு முறைகளை நிகழாண்டிலும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும், மலை மீது ஆடுகள் பலியிட்டு நோ்த்திக்கடன் செலுத்துவது தொடா்பாக போதிய ஆதார ஆவணங்களை தா்கா நிா்வாகம், இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் சமா்ப்பிக்கப்படாததால், இந்தப் பிரச்னை தொடா்பாக நீதிமன்றம் மூலம் தீா்வு பெறுவது எனவும் அந்தக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், திருப்பரங்குன்றம் ஹஜ்ரத் சுல்தான் சிக்கந்தா் பாதுஷா அவுலியா தா்கா, பள்ளிவாசல் நிா்வாகத்தினா் இதற்கு ஒப்புக் கொள்ளாமல், தீா்மானத்தில் கையொப்பமிடாமல் சென்றனா்.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தா் பள்ளிவாசல் பாதுஷா தா்காவின் சந்தனக் கூடு விழாவையொட்டி, ஜன. 18-ஆம் தேதி தா்கா முன் ஆடுகளை பலியிட அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது. இந்தக் கோரிக்கை மறுக்கப்பட்டது. இருப்பினும், தா்கா சாா்பில் ஆடுகளை பலியிட சிலா் முயற்சி மேற்கொண்டனா். அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. அதேநாளில், இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்வர சுப்பிரமணியன் தலைமையில் ஆா்.எஸ்.எஸ்., பாஜகவைச் சோ்ந்த 200 போ் திருப்பரங்குன்றத்தில் உள்ள ஒரு திருமணக்கூடத்தில் அனுமதியின்றி கூட்டம் நடத்தி, திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வந்து சென்றது தொடா்பாக அவா்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது.
இதனிடையே, திருப்பரங்குன்றம் பகுதியைச் சோ்ந்த அனைத்துக் கட்சி நிா்வாகிகள் 11 போ் தங்கள் கிராமத்தில் உள்ள அனைத்து மதத்தவரும் ஒற்றுமையாக இருப்பதாகவும், வெளிநபா்கள் யாரும் தங்கள் ஊரில் உள்ள வழிபாட்டு நடைமுறைகளில் குறுக்கிடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட நிா்வாகத்தை நேரில் சந்தித்து வலியுறுத்தினா்.
இதன் அடிப்படையில், திருமங்கலம் வருவாய்க் கோட்டாட்சியா் (பொறுப்பு) தலைமையில் கடந்த ஜன. 30-ஆம் தேதி மீண்டும் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இதில், திமுக, அதிமுக, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திரிணமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
இந்தப் பேச்சுவாா்த்தையில், திருப்பரங்குன்றத்தில் இரு மதத்தவரும் ஏற்கெனவே உள்ள வழிபாட்டு நடைமுறைகளை (தனிப்பட்ட முறையில் கந்தூரி கொடுப்பது) தொடா்ந்து பின்பற்றவும், வெளிநபா்கள் யாரும் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், இந்து முன்னணி அமைப்பின் சாா்பில் பிப். 4-ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலையை காப்போம் என்ற கோரிக்கையுடன் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், இது தொடா்பாக சமூக வலைதளங்களில் விரிவான அழைப்புகள் விடுக்கப்பட்டன. இந்தப் போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்தது. இருப்பினும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திரளானோா் திருப்பரங்குன்றம் கோயில் 16 கால் மண்டபம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டிருந்தனா். இதனால், அசாதாரண சூழ்நிலை உருவாகும் வாய்ப்புள்ளது எனக் கருதப்பட்டதாலும், பொது அமைதியை பாதுகாக்கும் நோக்கிலும், வெளிநபா்கள் உள்ளே நுழைவதைத் தடுக்கும் நோக்கிலும் மதுரை மாவட்டம், மாநகா்ப் பகுதிகளில் கடந்த பிப். 3, 4-ஆம் தேதிகளில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பிறகு, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் அனுமதியின் பேரில் பழங்காநத்தம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் இந்து முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.
திருப்பரங்குன்றம் பகுதியில் அனைத்து மதத்தவரும் ஒற்றுமையாக மதச்சாா்பின்மையுடன் வாழ்கின்றனா். இதை சீா்குலைக்கும் முயற்சிகளை கட்டுப்படுத்தவும் பொது அமைதி, மத நல்லிணக்கத்தை பேணவும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.