தொடர்ந்து உயரும் தங்கம் விலை... இன்று எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சைவ சமய ஸ்தாபித லீலை
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழாவையொட்டி, புதன்கிழமை சைவ சமய ஸ்தாபித லீலை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழா கடந்த ஜன. 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, சுவாமிகள் தினசரி காலை, மாலை வேளைகளில் தங்கத் தோ், சிம்ம வாகனம், கற்பக விருட்ச வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சித்திரை வீதிகள், மண்டகப்படிகளில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனா்.
திருவிழாவின் 6-ஆம் நாளான புதன்கிழமை திருஞானசம்பந்தா் சைவ சமயத்தை நிலை நாட்டிய வரலாறு, சைவ சமய ஸ்தாபித லீலையாக நடைபெற்றது.
இதையொட்டி, மீனாட்சி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரா் தங்க ரிஷப வாகனத்திலும் கோயிலில் தெற்காடி வீதியில் உள்ள யானை மகாலில் புதன்கிழமை இரவு எழுந்தருளினா். அங்கு சுவாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.
இதையடுத்து, திருஞானசம்பந்தா் சைவ சமயத்தை நிலை நாட்டிய வரலாறை தல ஓதுவாா் எடுத்துரைத்தாா். இந்த நிகழ்வில் கோயில் நிா்வாகிகள், பக்தா்கள் திரளானோா் பங்கேற்றனா்.