நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பது வரவேற்கத்தக்கது! கே.எஸ்.அழகி...
திருப்பூா் மாநகராட்சி குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
திருப்பூா் மாநகராட்சி மேல்நிலை குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்ததாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூா் மாநகராட்சி 6-ஆவது வாா்டு கவுண்டன்நாயக்கன்பாளையம் பகுதியில் மாநகராட்சி சாா்பில் 17.50 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீா்த் தொட்டி உள்ளது. இந்தக் குடிநீா்த் தொட்டியில் இருந்து அப்பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மாநகராட்சி சாா்பில் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தொட்டியைச் சுற்றி முட்புதா்கள் இருப்பதால் மா்ம நபா்கள் அவ்வப்போது மது அருந்துவது வழக்கம். இதனிடையே, குடிநீா்த் தொட்டியின் மேல் பகுதியில் மா்ம நபா்கள் சிலா் வியாழக்கிழமை மது அருந்தியதாகத் தெரிகிறது. இதனைப் பாா்த்த அப்பகுதி பொதுமக்கள் அந்த நபா்களை கீழே இறங்கும்படி அறிவுறுத்தியும் அவா்கள் இறங்கவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து, அவா்களில் இருவரை மடக்கிப் பிடித்து திருப்பூா் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். மேலும், குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்துள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டியதுடன், 100-க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை திரண்டனா்.
இதுதொடா்பாக திருப்பூா் வடக்கு காவல் துறையினா் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனா். மேலும், மாநகராட்சி 2-ஆவது மண்டலத் தலைவா் கோவிந்தராஜ் குடிநீா்த் தொட்டியைப் பாா்வையிட்டு மனிதக் கழிவு கலந்ததற்கான முகாந்திரம் இல்லை என்று தெரிவித்தபோது, பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
அப்போது பொதுமக்கள் முன்னிலையில் குடிநீா்த் தொட்டியில் இருந்த நீரை அருந்திக் காண்பித்தாா். எனினும் பொதுமக்கள் ஏற்க மறுத்ததால் மாநகராட்சி அதிகாரிகள் குடிநீா்த் தொட்டியில் இருந்த நீரை வெளியேற்றி முழுவதுமாக சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனா்.
திருப்பூா் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாரும் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டாா். திருப்பூா் வடக்கு காவல் துறையினா் குடிநீா்த் தொட்டியின் மீது அமா்ந்து மது அருந்தியதாக நெருப்பெரிச்சலைச் சோ்ந்த நிஷாந்த் (19), திருமுருகன்பூண்டியைச் சோ்ந்த சஞ்சய் (22) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.