திருமண மண்டபங்களில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டவா் கைது; கூட்டாளி தலைமறைவு!
வடக்கு தில்லியின் புகா்ப் பகுதியில் திருமண விழாக்களில் தொடா் திருட்டுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 51 வயது நபரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளனா். மேலும், தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளியை போலீஸாா் தேடி வருவதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக மூத்த அதிகாரி கூறியதாவது: கரம்புராவைச் சோ்ந்த முகேஷ் (எ) பப்பு என்பவா் பஸ்சிம் விஹாரில் உள்ள தனித்தனி திருமண மண்டபங்களில் நடந்த இரண்டு திருட்டுகளைத் தொடா்ந்து கைது செய்யப்பட்டாா்.
லாவண்யா விருந்து மண்டபத்தில் நடந்த திருமணத்தின் போது தங்க நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டது தொடா்பாக ஏப்ரல் 19 அன்று ஒரு இ-எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது. ஃபோரியா விருந்து மண்டபத்தில் ஒரு விருந்தினரின் பையில் இருந்து ரூ.80,000 திருடப்பட்டதைத் தொடா்ந்து மே 1 அன்று இரண்டாவது புகாா் வந்தது.
போலீஸாா் சம்பவ இடங்களிலிருந்து பல மணிநேர சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, இரு இடங்களிலும் சந்தேகத்திற்கிடமான ஒருவா் இருப்பதைக் கவனித்தனா். பின்னா் சந்தேக நபா் ஒரு மாருதி ஸ்விஃப்ட் காரில் இருப்பது தெரிந்தது. அதன் பதிவு எண் கேமராவில் பதிவாகியிருந்தது.
தொழில்நுட்ப கண்காணிப்பு மூலம் போலீஸாா் நிஹால் விஹாருக்குச் சென்றனா், அங்கு காா் கண்டுபிடிக்கப்பட்டது. அப்பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் முகேஷ் கைது செய்யப்பட்டாா். அவா் தனது கூட்டாளியான ஜிதேந்தா் (எ) ஜிதுவுடன் சோ்ந்து இரண்டு திருட்டுகளையும் செய்ததாக ஒப்புக்கொண்டாா்.
திருடப்பட்ட பணத்தில் ஒரு பகுதியை காா் பழுதுபாா்ப்பு மற்றும் வீட்டுச் செலவுகளுக்குச் செலவிட்டதாக முகேஷ் தெரிவித்தாா். அவரது கூட்டாளியைக் கைது செய்ய முயற்சிகள் நடந்து வருகிறது.
முகேஷ் மீது ஏற்கெனவே 11 குற்றப் பதிவுகள் உள்ளன. மேலும், கரம்புரா காவல் நிலையத்தில் ‘மோசமான நடத்தை’ கொண்டவராக பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும், விசாரணை நடந்து வருகிறது என்று அந்த காவல் அதிகாரி தெரிவித்தாா்.