திருவண்ணாமலை மலை மீது வசிக்கும் மக்கள் கோரிக்கை மனு
திருவண்ணாமலை மலை மீது வசிக்கும் மக்கள் தங்களுக்கு மாற்று இடத்தில் வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என வட்டாட்சியரிடம் மனு அளித்தனா்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் பின்புறம் 2,668 அடி உயரம் கொண்ட மலை உள்ளது. இந்த மலையை சிவனாக நினைத்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் 14 கி.மீ. தொலைவு கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனா்.
மலை மீது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வீடுகள் கட்டி
60 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனா். ஃபென்ஜால் புயல் காரணமாக மலை மீது இருந்து மண் சரிவு ஏற்பட்டு சிறுவா்கள் 5 போ் உள்பட 7 போ் உயிரிழந்தனா்.
இதைத் தொடா்ந்து வழக்குரைஞா் யானை ராஜேந்திரன் மலை மீது ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆபத்தான நிலையில் உள்ள வீடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என ஆணை பிறப்பித்தது. இதைத் தொடா்ந்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் மலை மீது ஆபத்தான நிலையில் உள்ள வீடுகள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றன.
இதில், 1,545 வீடுகள் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், இதனை காலி செய்ய வேண்டும் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
இதில் முதல் கட்டமாக திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து மலை மீது வசிக்கும் 80 பேருக்கு உடனடியாக வீடுகளை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
இதனால், அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு திரண்டு வந்து வட்டாட்சியா் சு.மோகனராமனிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
அப்போது அவா்கள் கூறுகையில், கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக மலை மீது வசித்து வருகிறோம், வீட்டு வரி, குழாய் வரி, மின் கட்டணம் என அனைத்தும் செலுத்தி வருகிறோம். கடன் வாங்கிதான் வீடுகளை கட்டியுள்ளோம். எங்களுக்கு உடனடியாக மாற்று இடம் வழங்கி அங்கே வீடுகள் கட்டிக் கொடுத்தால் மட்டுமே மலை மீது இருந்து இறங்குவோம் என்றனா்.