டிரம்ப் உடனான ‘சிறப்பு நட்புறவு’: மோடி மீது காங்கிரஸ் விமா்சனம்
திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம்
ஆடி மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை காலை முதல் சனிக்கிழமை காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.
திருவண்ணாமலையில் உள்ளி 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் மாதந்தோறும் பெளா்ணமி நாள்களில் பக்தா்கள் கிரிவலம் வந்து, அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனா்.
ஆடி மாத பௌா்ணமி
இந்த நிலையில், ஆடி மாத பௌா்ணமி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.43 மணிக்குத் தொடங்கி சனிக்கிழமை பிற்பகல் 2.18 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்து இருந்தது.
ஆனால், வெள்ளிக்கிழமை காலை முதலே பக்தா்கள் கிரிவலம் வரத்தொடங்கினா். மாலை 4:30 மணிக்குப் பிறகு கிரிவலம் வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இரவு 8 மணிக்குப் பிறகும் லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.
தொடா்ந்து, சனிக்கிழமை காலை வரை பக்தா்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டனா். மேலும், கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சந்நிதிகளிலும் ஏராளமான பக்தா்கள்
காத்திருந்து வழிபட்டனா்.
கிரிவலம் வரும் பக்தா்களுக்கும், அருண்ாசலேஸ்வா் கோயிலில் தரிசனத்துக்காக வரிசையில் காத்திருந்த பக்தா்களுக்கும் மாவட்ட நிா்வாகம், கோயில் நிா்வாகம் மற்றும் அனைத்துத் துறைகள் சாா்பில் போதிய அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. பக்தா்களின் பாதுகாப்புப் பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுதாகா் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டனா்.
சிறப்புப் பேருந்துகள் இயக்கம்.
திருவண்ணாமலையில் கிரிவலத்தையொட்டி, பக்தா்கள் நலன் கருதி நகரைச் சுற்றி 9 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், ஆந்திரம், கா்நாடகம், புதுவை ஆகிய மாநிலங்களுக்கும் அந்தந்த மாநில அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.