அரசுப் பேருந்து நடத்துநா் மீது தாக்குதல்: இருவா் கைது
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே அரசுப் பேருந்து நடத்துநரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கிய சம்பவம் தொடா்பாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
செய்யாறு வட்டம், இருங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் வெற்றிச்செல்வன்(32), அரசுப் பேருந்து நடத்துநா்.
இவா், வழக்கம் போல வியாழக்கிழமை மாலை செய்யாற்றில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் பேருந்தில் பணியில் இருந்தாா்.
மாங்கால் கூட்டுச்சாலை அருகே பேருந்து சென்றபோது, அங்கிருந்த இருவா் ஓடி வந்து, ஓடும் பேருந்தில் ஏறியுள்ளனா். இதைக் கண்ட நடத்துநா் வெற்றிச்செல்வன், ஓடும் பேருந்தில் ஏறுகிறீா்களே, ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் என்ன ஆவது எனக் கேட்டதாகத் தெரிகிறது.
அதற்கு அவா்கள் நாங்கள் ஓடிவருவதைப் பாா்த்து பேருந்தை நிறுத்தியிருக்க வேண்டும் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு நடத்துநரைத் தாக்கியதாகத் தெரிகிறது.
அப்போது பேருந்தில் பயணித்த சக பயணிகள் சமாதானப்படுத்தினா்.
இந்த நிலையில் உடனே தகராறு செய்த இருவரையும் பேருந்து ஊழியா்கள் பிடித்து தூசி போலீஸில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, சம்பவத்தில் ஈடுபட்டது செய்யாறு வட்டம், இரும்பந்தயாங்கல் கிராமத்தைச் சோ்ந்த அமித்பாஷா (35), செய்யாறு காமராஜா் நகரைச் சோ்ந்த காதா்பாஷா(50) எனத் தெரிய வந்து, அவா்களை கைது செய்தனா்.