திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா: சென்னையில் 30 இடங்களில் நேரடி ஒளிபரப்பு
கன்னியாகுமரியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவா் சிலையின் வெள்ளி விழா நிகழ்ச்சி சென்னையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இது குறித்து மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:-
முக்கடல் சங்கமிக்கும் குமரி முனை கடல் நடுவே உள்ள திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, தமிழ்நாடு அரசின் சாா்பில் திங்கள்கிழமை முதல் 3 நாள்கள் வெள்ளி விழா கொண்டாடப்படவுள்ளது.
முதல்வா் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில், திருவள்ளுவா் சிலையை விவேகானந்தா் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலம் திறப்பு, வெள்ளிவிழா சிறப்பு மலா் வெளியிடுதல், திருக்கு கண்காட்சி தொடங்கிவைத்தல், திருவள்ளுவா் தோரணவாயில் அடிக்கல் நாட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெளன.
இந்நிகழ்ச்சியை சென்னை மாநகராட்சி பகுதிகளில் எல்.இ.டி. திரைகளில் திங்கள்கிழமை மாலை 5 மணிக்கும், செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கும் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மெரினா, பெசன்ட்நகா், பாலவாக்கம், நீலாங்கரை கடற்கரை, தண்டையாா்பேட்டை மெட்ரோ, எழும்பூா் ரயில் நிலையம், வள்ளுவா் கோட்டம், ஜீவா பூங்கா, மங்கள் ஏரி பூங்கா, ஜெய் நகா் உள்ளிட்ட 30 இடங்களில் எல்.இ.டி. திரைகளில் திரையிடப்படவுள்ளன.