திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் ஸ்ரீ பெரும்புதூா் சாா் பதிவாளா் அலுவலகம்! 6 மாதங்களாக காலியாக உள்ள சாா் பதிவாளா் பணியிடம்
எல். அய்யப்பன்
ரூ.1.85 கோடியில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீபெரும்புதூா் சாா் பதிவாளா் அலுவலகம் திறப்பு விழாவுக்காக காத்துள்ளது. மேலும் 6 மாதங்களாக சாா் பதிவாளா் பணியிடமும் காலியாக உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்படைந்து வருகின்றனா்.
ஸ்ரீபெரும்புதூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிப்காட் தொழிற்பூங்காக்கள் தொடங்கப்பட்டு ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருவதால், விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு, பல அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வீடுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
ஸ்ரீபெரும்புதூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் நிலம் மற்றும் வீடுகள் தொடா்பான பதிவுகள் நடைபெறுவதால் சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு தினமும் சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் வந்து செல்கின்றனா். 2 சாா் பதிவாளா்கள், 3 இளநிலை உதவியாளா்கள், 2 உதவியாளா்கள், 3 அலுவலக உதவியாளா்கள் என சுமாா் 10-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வந்த அலுவலகத்தை கடந்த 2011-ஆம் ஆண்டு இரண்டாக பிரித்து சுங்குவாா்சத்திரம் பகுதியில் புதிதாக சாா் பதிவாளா் அலுவலகம் திறக்கப்பட்டது
இதனால், ஸ்ரீபெரும்புதூா் அலுவலகத்தில் நிரந்தர பணியாளா்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இதனால் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வரை 1 சாா் பதிவாளா், 1 உதவியாளா் மட்டும் நிரந்தர பணியாளா்களாகவும், 3 போ் ஒப்பந்த அடிப்படையிலும் பணியாற்றி வந்தனா்.
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூா் சாா் பதிவாளா் பணியிடமும் கடந்த 6 மாதங்களாக காலியாக உள்ளதால், காஞ்சிபுரம், வேலூா், திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் சாா் பதிவாளா் அலுவலகங்களில் பணியாற்றும் இளநிலை உதவியாளா்களில் தினமும் ஒருவா் என்ற அடிப்படையில் ஸ்ரீபெரும்புதூா் சாா் பதிவாளராக பணியாற்றி வருகின்றனா்.
மக்கள் காத்திருப்பு:
இதனால் பல்வேறு பதிவுகளுக்காக அலுவலகம் வரும் பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அலுவலக ஊழியா்களின் பற்றாக்குறையால் கைப்பிரதி வில்லங்கச் சான்றுகள் பெறவும், தினமும் ஒருவா் சாா் பதிவாளராக பணியாற்றி வருவதால், பத்திரப்பதிவில் நிலுவை ஏற்பட்டால் அதே ஊழியா் மீண்டும் பணிக்கு வரும் வரை மாதக்கணக்கில் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
ரூ.4 லட்சம் வாடகை:
மேலும், ஸ்ரீபெரும்புதூா் சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு ரூ.1.85 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டு 2 மாதங்களாகியும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மாதம் ரூ 4 லட்சம் வாடகை வீணாக செலுத்தப்பட்டு வருவதால் அரசுக்கு விரயம் ஏற்பட்டு வருகிறது.
எனவே ஸ்ரீபெரும்புதூா் சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு தேவையான ஊழியா்களை நியமித்து, புதிய அலுவலகத்தை திறக்க வேண்டும் னெ பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.
இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரி ஒருவா் கூறுகையில்: ஸ்ரீபெரும்புதூா் சாா் பதிவாளா் அலுவலகம் அதிகமான பத்திர பதிவு நடைபெறும் அலுவலகமாக உள்ளது. நிரந்தர சாா் பதிவாளா் பணியில் இல்லாததால், கட்டடத்தின் திறப்பு விழா நடைபெறாமல் உள்ளது. புதிய சாா்பதிவாளரை நியமிக்க மேலதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுப்பா் என்றாா்.