தில்லி கல்லூரி வகுப்பறையில் சாணம் பூசப்பட்ட விவகாரம்: பழிவாங்கிய மாணவத் தலைவர்!
தில்லியிலுள்ள ஒரு கல்லூரியின் வகுப்பறையின் சுவரில் மாட்டுச் சாணம் பூசப்பட்ட நிலையில் அந்தக் கல்லூரியின் முதல்வரின் அறையிலும் மாட்டுச் சாணம் பூசப்பட்டுள்ளது.
தில்லி அரசின் கீழ் செயல்பட்டு வரும் லக்ஷ்மி பாய் கல்லூரியின் முதல்வரான பிரத்யூஷா வட்சலா என்பவர் கடந்த ஏப்.13 அன்று அங்குள்ள வகுப்பறையைக் குளிர்விப்பதாகக் கூறி அதன் சுவர்களில் மாட்டுச் சாணத்தைப் பூசியுள்ளார்.
இதனைப் பாரம்பரிய முறைப்படி குளிர்விக்கும் திட்டம் எனக் கூறி அந்த கல்லூரி முதல்வர் தலைமையிலான ஊழியர்கள் இந்தச் செயலில் ஈடுபடும் விடியோ இணையத்தில் வைரலானது.
இந்த விவகாரம் குறித்து ஏராளமானோர் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், தில்லி பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவரான ரோனாக் காத்ரி என்பவர் முதல்வர் பிரத்யூஷாவின் அலுவலக அறையின் சுவர்களில் மாட்டுச் சாணத்தை பூசியுள்ளார்.
இதுகுறித்த விடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த அவர், எங்களுக்கு முதல்வரின் செயல் மீது முழு நம்பிக்கையுள்ளது எனவும் இனி அவர் தனது அறையிலுள்ள குளிரூட்டிகளை விலக்கி, மாட்டுச் சாணத்தைப் பூசி குளிரூட்டிக்கொள்வார் எனக் கூறியுள்ளார்.
ஆனால், தனது செயல் குறித்து முதல்வர் பிரத்யூஷா கூறுகையில், இந்தச் சம்பவம் அந்தக் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர்ச்சியான ஆய்வின் ஒரு பகுதி மட்டுமே என்றும் ஒரு வாரம் கழிந்த பின்னரே இந்த ஆய்வின் முடிவுகளை தன்னால் பகிர முடியும் எனவும் கூறியுள்ளார்.
மேலும், முழுவதுமாக அறியாமல் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டிய அவர் இயற்கையான மண்ணைத் தொடுவதில் எந்தவொரு ஆபத்தும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இந்தச் சம்பவம் குறித்த விடியோவை வாட்ஸ் ஆப் குழுவில் பகிர்ந்த அவர் அந்த வகுப்பறையிலிருந்த மாணவர்களுக்கு புதிய அறை ஒதுக்கப்படும் எனவும் உங்களது கல்லூரி அனுபவத்தை இனிமையாக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.
இதையும் படிக்க:தஹாவூா் ராணாவிடம் தினமும் 8 மணி நேரத்துக்கு மேல் என்ஐஏ விசாரணை