தில்லி கூட்ட நெரிசல்: கும்பமேளாவுக்கு 4 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
தில்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலைத் தொடர்ந்து கும்பமேளாவுக்கு 4 சிறப்பு ரயில்களை மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.
மகா கும்பமேளாவுக்குச் செல்லும் ரயில்களில் பயணிக்க தில்லி ரயில் நிலையத்தில் மக்கள் காத்துக்கொண்டிருக்கும்போது சனிக்கிழமை இரவு திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.
அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடியது, சில விரைவு ரயில்கள் வர தாமதமானது, அதிக விலைக்கு சிலர் டிக்கெட்டுகளை விற்றுக்கொண்டிருந்தது உள்ளிட்டவை தில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்காக காரணமாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தியாவுக்கான நிதியுதவியை நிறுத்திய அமெரிக்கா!
எனினும் கூட்ட நெரிசல் ஏற்பட முக்கிய காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக சிறப்பு உயர்நிலைக் குழு அமைத்து ரயில்வே துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் தில்லி கூட்ட நெரிசலைத் தொடர்ந்து மகா கும்பமேளாவிற்காக பிரயாக்ராஜ் செல்லும் பக்தர்களின் வசதிக்காக 4 சிறப்பு ரயில்களை மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.
அதிகாரிகள் பக்தர்களுக்கு பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளனர் என்றும் பயணிகள் குறிப்பிட்ட பயண வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் பயணிகள் உரிய டிக்கெட்டுகளை வாங்கி வரிசையில் நின்று ரயில்களில் ஏற வேண்டும் என்று ரயில்வே அதிகாரி ஸ்வப்னில் நிலா வலியுறுத்தியுள்ளார்.