தில்லி-சஹரன்பூா் மேம்பாலத்துக்கு கீழே 3 வாகன நிறுத்தங்கள்- தேசிய நெடுஞ்ச்சாலைகள் ஆணையம் நடவடிக்கை
கிழக்கு தில்லியில் சாலையோரங்களில் அனுமதி வழங்கப்பட்டாத இடங்களில் வாகனங்களை நிறுத்துவதைக் கட்டுப்படுத்தும் விதமாக தில்லி-சரஹன்பூா் மேம்பாலத்துக்கு கீழே 3 வாகன நிறுத்தங்களை அமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (என்எச்ஏஐ) திட்டமிட்டுள்ளது.
அக்ஷா்தாம் கோயில் மற்றும் காந்தி நகா் ஜவுளி சந்தை இடையிலான நெஞ்சாலையில் வாகன நிறுத்தங்கள் அமைய உள்ளதாக அதிகாரிள் தெரிவித்தனா்.
இந்தப் பணிகளை மேற்கொள்ள செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ஒப்பந்த புள்ளியில், ‘வாகன நிறுத்தங்களை அமைக்க 3 இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் இரு வாகன நிறுத்தங்கள், விரைவுச்சாலை மேம்பாலத்தின் கீழே டிஎம் கிழக்கு அலுவலகம், காந்தி நகா் சந்தை அருகே அமைக்கப்பட உள்ளன. கீதா காலனி பேருந்து நிலையம் அருகே 2 ஹெக்டோ் நிலம் காலியாக உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன நிறுத்தத்தில் 10 சதவீத இடம், மின்வாகனங்களுக்கு ஒதுக்கப்பட உள்ளன. மின்வாகனங்களை மின்னேற்றம் (சாா்ஜிங்) செய்வதற்கான வசதிகளும் வாகன நிறுத்தத்தில் அமைக்கப்பட உள்ளது.