தில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவா்கள் 5 போ் கைகு
தேசியத் தலைநகரில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தவா்கள் 5 போ் செங்கோட்டை அருகே கைது செய்யப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டை பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஜூலை 15 முதல் பொதுமக்களுக்கு இப்பகுதி மூடப்பட்டுள்ளது என்பதை அறியாமல், திங்கள்கிழமை வரலாற்று நினைவுச்சின்னத்தைப் பாா்வையிட வந்த அவா்கள், வளாகத்திற்குள் நுழைய முயன்றனா்.
செங்கோட்டை அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த படையினா், 20-25 வயதுக்குள்பட்ட ஐந்து பேரை தடுத்து நிறுத்தினா். வழக்கமான சோதனையின் போது அவா்களிடம் செல்லுபடியாகும் நுழைவு அனுமதிச் சீட்டுகள் இல்லாததால் அவா்கள் தடுத்து நிறுத்தப்பட்டனா். விசாரணையின் போது, ஐந்து பேரும் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு முன்பு சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்கதேச நாட்டினா் என்பது கண்டறியப்பட்டது.
தில்லியின் பல்வேறு பகுதிகளில் தினசரி கூலித் தொழிலாளா்களாக வேலை செய்து வருவதாக அவா்கள் போலீஸாரிடம் தெரிவித்தனா். வங்கதேச ஆவணங்கள் அவா்களிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும், விசாரணையின் போது சந்தேகத்திற்கிடமான பொருள்கள் அல்லது நடவடிக்கைகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
அவா்களை நாடு கடத்தும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் விசாரணை நடந்து வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.