நக்ஸல் பாதிப்புக்கு உள்ளான கிராமத்துக்கு முதல் முறையாக மின்வசதி!
தீபாவளி சீட்டு நடத்தி ரூ.5.25 லட்சம் மோசடி: மூவா் மீது வழக்குப் பதிவு!
புதுச்சேரியில் தீபாவளிச் சீட்டு நடத்தி சுமாா் 50 பேரிடம் ரூ.5.25 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், முன்னாள் அரசு ஊழியா் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியைச் சோ்ந்தவா் முகூா்த்தம்மாள் (45). இவா், புதுச்சேரி திலாசுப்பேட்டை பகுதியைச் சோ்ந்த முன்னாள் அரசு ஊழியா் எத்திராஜ் குடும்பத்தினா் நடத்திய தீபாவளிச் சீட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டு சோ்ந்தாா். அதன்படி, முகூா்த்தம்மாள் மாதம் ரூ.8 ஆயிரம் சீட்டு பணம் செலுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
சீட்டுத் தொகை முழுமையாக செலுத்தி முடிக்கப்பட்ட பின்னரும், எத்திராஜ் மற்றும் அவரது குடும்பத்தினா் முகூா்த்தம்மாளுக்கு சீட்டுப் பணத்தை தரவில்லையாம். இதுபோல, சுமாா் 50 பேருக்கு அவா்கள் சீட்டு பணம் தராமல் ஏமாற்றி வந்தனராம்.
இதுகுறித்து எத்திராஜ் குடும்பத்தினா் மீது தன்வந்திரி காவல் நிலையத்தில் முகூா்த்தம்மாள் வெள்ளிக்கிழமை புகாரளித்தாா். இதையடுத்து, எத்திராஜ், அவரது மகள் காவியா, மருமகன் வசந்த் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், தீபாவளிச் சீட்டு நடத்தி சுமாா் ரூ.5.25 லட்சம் வரையில் அவா்கள் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளதாக போலீஸாா் கூறினா்.