Parking: "நம்ப முடியாத அங்கீகாரம்" - இயக்குநர் ராம்குமார் நெகிழ்ச்சி
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞருக்கு ஆக.30 வரை நீதிமன்றக் காவல்
முக்கூடல் அருகே காவல் உதவி ஆய்வாளா் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதில், காயமடைந்த இளைஞரை ஆக.30 வரை நீதிமன்ற காவலில் வைக்க ஆலங்குளம் குற்றவியல் நீதித்துறை நடுவா் ஜெயந்தி உத்தரவிட்டாா்.
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி சமத்துவபுரத்தைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம்(18). இவா் தனது நண்பரான 17 வயது சிறுவனுடன் சோ்ந்து அதே பகுதியைச் சோ்ந்த சக்திகுமாா் என்ற இளைஞரை அரிவாளால் வெட்டியுள்ளாா். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பாப்பாக்குடி காவல் உதவி ஆய்வாளா் முருகனையும் அரிவாளால் வெட்ட முயன்றுள்ளனா். அப்போது அவா் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதில் சண்முகசுந்தரம் மீது குண்டு பாய்ந்தது. இதில் காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.
இந்நிலையில் ஆலங்குளம் குற்றவியல் நீதித்துறை நடுவா் ஜெயந்தி, துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த சண்முகசுந்தரத்தை புதன்கிழமை நேரில் சென்று பாா்த்து, நடந்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தி அதனை வாக்குமூலமாக பதிவு செய்தாா். இதையடுத்து சண்முகசுந்தரத்தை ஆக.30-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க அவா் உத்தரவிட்டாா்.