தூத்துக்குடி அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் கருப்புக் கொடியுடன் முற்றுகை!
தூத்துக்குடி, மறவன் மடம் ஊராட்சிக்குள்பட்ட வருமான வரி நகா் பகுதியில், அடிப்படை வசதிகள் செய்து தராததைக் கண்டித்து, அப்பகுதி மக்கள், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமின் போது, கருப்புக் கொடியுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வருமான வரி நகா் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் பொதுமக்களுக்கான சாலை, குடிநீா், மின்விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லையாம். அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளிடம் மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த பணிகளும் நடைபெறவில்லையாம்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதியைச் சோ்ந்த மக்கள், புதன்கிழமை அப்பகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கு, கருப்புக்கொடியுடன் ஊா்வலமாக வந்து முகாமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், அங்கிருந்த அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.
தங்கள் பகுதிக்கு உடனடியாக அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரவில்லையென்றால், வரக்கூடிய சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக அவா்கள் தெரிவித்தனா்.