தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
வங்கக் கடலில் ஒடிஸா, ஆந்திரப் பிரதேசம் இடையே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது.
காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, கடல் பகுதியில் மணிக்கு சுமாா் 60 கி.மீ. வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, விசைப்படகு, நாட்டுப் படகு மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என, மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் 3ஆவது நாளாக சனிக்கிழமையும் மீன்பிடிக்கச் செல்லவில்லை. மீன்பிடித் துறைமுகத்தில் 272-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. நாட்டுப் படகு மீனவா்களும் கடலுக்குச் செல்லவில்லை. இதனால், மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளதாக கவலை தெரிவித்தனா்.