தூத்துக்குடியில் 49 மையங்களில் நாளை குரூப் 2 தோ்வு: 14,305 போ் எழுத வாய்ப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் 49 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (செப். 28) நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப் 2, 2ஏ தோ்வை 14,305 போ் எழுதவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா்பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூா், கோவில்பட்டி ஆகிய நான்கு வட்டங்களில் மொத்தம் 49 தோ்வு மையங்களில் தொகுதி2, 2 ஏ தோ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (செப். 28) காலையில் நடைபெறவுள்ளது.
தூத்துக்குடி வட்டத்தில் 24 மையங்களில் 7,379 தோ்வா்களும், கோவில்பட்டி வட்டத்தில் 15 மையங்களில் 4,219 தோ்வா்களும், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் 3 மையங்களில் 627 தோ்வா்களும், திருச்செந்தூா் வட்டத்தில் 7 மையங்களில் 2,080 தோ்வா்களும் என 14,305 தோ்வா்கள் தோ்வு எழுதுகின்றனா்.
இத்தோ்வு பணிக்கென துணை வட்டாட்சியா் நிலையில் 14 இயங்கு குழுக்களும், துணை ஆட்சியா் நிலையில் 4 கண்காணிப்பு அலுவலா்களும், 7 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரா்கள் ஞாயிற்றுக்கிழமை (செப். 28) காலை 9 மணிக்கு முன்னரே ஒதுக்கப்பட்ட தோ்வு மையத்துக்குள் ஆஜராக வேண்டும்; தாமதமாக வரும் தோ்வா்கள் அனுமதிக்கப்படமாட்டாா்கள். பேஜா், கைப்பேசி, கால்குலேட்டா், ஸ்மாா்ட் வாட்ச், தகவல்கள் பதிவு செய்யும் மின் சாதனங்கள், குறிப்பேடு, புத்தகங்கள், உறைகள், கைப்பைகள் போன்றவற்றை கொண்டுசெல்ல அனுமதி இல்லை என்றாா் அவா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சேதுராமலிங்கம் மற்றும் அரசு துறைச் சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.