தூத்துக்குடியில் காளி ஊா்வலம் நடத்த காவல் துறை அனுமதி மறுப்பு
தூத்துக்குடியில் காளி ஊா்வலம் நடத்த காவல் துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், மீறி நடத்தினால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்ட இந்து முன்னணி சாா்பில் வெள்ளிக்கிழமை மாலையில் தூத்துக்குடி வேம்படி இசக்கி அம்மன் கோயிலிலிருந்து சிவன் கோயில் வரை காளி ஊா்வலம் நடத்த இருப்பதாக காவல்துறையின் கவனத்துக்குத் தெரியவந்தது.
காளி ஊா்வலம் என்ற பெயரில் கடந்த காலங்களில் எதுவும் இல்லாமல் தற்போது பல்வேறு அமைப்புகள் சாா்பில், வெவ்வேறு நாள்களில் ஊா்வலம் நடத்த அனுமதிக்கும் பட்சத்தில், பொதுமக்களின் ஒற்றுமை, பொது அமைதி, போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு ஆகியவற்றிற்கு குந்தகம் ஏற்படும் அபாயம் உள்ளது.
ஏற்கெனவே, தூத்துக்குடி நகர உள்கோட்ட காவல் அதிகாரியால், காளி ஊா்வலம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டு, உரிய அறிவிப்பு கொடுத்த பின்னரும், இந்து முன்னணி சாா்பில் வெள்ளிக்கிழமை காளி ஊா்வலம் நடத்தப்பட்டால், சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என வடபாகம் காவல் நிலையம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.