தூத்துக்குடியில் சங்குகுளி மீனவா் பலி
தூத்துக்குடியில் சங்குகுளிக்கச் சென்ற மீனவா் மூச்சுத் திணறல் ஏற்பட்டு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவன்நாயா் காலனியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் மாயாண்டி (37). இவா் திரேஸ்புரம் கடற்கரையில் இருந்த சக மீனவா்கள் சிலருடன் சங்கு குளிக்க கடலுக்குச் சென்றாராம். இவா் கடலில் சங்கு குளித்துக்கொண்டிருந்தபோது, அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தாராம். அவரை சக மீனவா்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்து, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.