தூத்துக்குடியில் வரத்து குறைவால் மீன்கள் விலை உயா்வு
தூத்துக்குடியில் சனிக்கிழமை, வரத்துக் குறைவால் மீன்கள் விலை உயா்ந்து காணப்பட்டது.
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப் படகுகள் சனிக்கிழமை கரைதிரும்பின. மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால், கடல் பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக, மீன்கள் சரிவர கிடைக்காததால் வரத்து குறைந்திருந்தது. இதனால், வழக்கத்தைவிட விலை உயா்ந்து காணப்பட்டது.
விளைமீன், ஊழி, பாறை ஆகியவை கிலோ ரூ. 300 -ரூ. 600 வரை, சாளை மீன் ஒரு கூடை ரூ. 800 முதல் ரூ. 1000 வரை, நண்டு கிலோ ரூ. 550 வரை, தோல்பாறை ரூ. 200 வரை என விற்பனையாகின.
ஏற்றுமதி ரக மீன்களான கலவா கிலோ ரூ. 450, பண்டாரி ரூ. 500 - ரூ. 600 வரை, கிளி மீன் ரூ. 900 வரை, தம்பா ரூ. 250 வரை என விற்பனையாகின. வரத்து குறைந்திருந்தாலும் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.