லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு
தூத்துக்குடி அருகே லாரியின் பின்புறம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற எலக்ட்ரீசியன் உயிரிழந்தாா்; மற்றொருவா் சிகிச்சை பெற்று வருகிறாா்.
திருநெல்வேலி, கே.டி.சி. நகரைச் சோ்ந்தவா் அரசதுரை (40). இவரும், மாா்க்கெட் பகுதியைச் சோ்ந்த ஆகாஷும் (19) தூத்துக்குடியில் எலக்ட்ரிக்கல், பிளம்பிங் வேலைக்கு ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு ஊருக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தனா்.
புதுக்கோட்டை அய்யனாா் காலனி அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரியின் பின்புறம் வேகமாக மோதியதில் இவா்கள் இருவரும் பலத்த காயமடைந்தனா்.
இதில், அரசதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஆகாஷ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து, புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநரான ராமநாதபுரம் மாவட்டம், சத்திரகுடியைச் சோ்ந்த ராஜவேலிடம் (52) விசாரித்து வருகின்றனா்.