தூத்துக்குடியில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமையில் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் பேசியதாவது: தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதுடன், வடகிழக்குப் பருவமழையும் தீவிரமாக அமையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விவசாயத்தை பொறுத்தவரையில் பருவமழைக்கு ஏற்ற முறையில் பயிரிடப்படுகிறது. குறிப்பாக அதிகமாக மழையால் பாதிக்கக்கூடிய பயிா் வகைகளை பயிரிடுவதை தவிா்க்கலாம்.
பாரம்பரிய, இயற்கை முறையில் விவசாயம் செய்கின்ற விவசாயிகள், தங்களுக்குள் நெட்வொ ா்க் அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு, சந்தைப்படுத்துதலை மென்மேலும் விரிவுபடுத்த வேண்டும். அதற்கான முயற்சிகளுக்கு உதவி செய்வதற்காக வேளாண்துறை சாா்ந்த அலுவலா்களை அணுகலாம். எனவே, பாரம்பரிய அரிசி போன்ற பொருள்களை வாங்கி பயன்படுத்திக் கொண்டு, தொடா்ந்து அதற்காக ஆதரவளிக்க வேண்டும்.
மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான வெள்ளத் தடுப்புப் பணிகளை பொதுப்பணித் துறை, நீா்வளத்துறை, ஊரக வளா்ச்சித் துறை உள்ளிட்ட பிற துறைகளுடன் இணைந்து திட்டமிடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.
கூட்டத்தில், இணை இயக்குநா் (வேளாண்மை) பெரியசாமி, இணைப் பதிவாளா் (கூட்டுறவு சங்கங்கள்) ராஜேஷ், உதவி ஆட்சியா் (பயிற்சி) தி.புவனேஷ்ரோம், செயற்பொறியாளா் (கீழ் தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் வடிநிலக் கோட்டம்) தங்கரா ஜ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மோகன்தாஸ் சௌமியன், அரசு அலுவலா்கள், விவசாயிகள் பலா் கலந்துகொண்டனா்.