மாநிலப் பல்கலை.களில் அதிகாரம் யாருக்கு? வழக்கு தொடர மேற்கு வங்க ஆளுநா் முடிவு!
தெற்கு பாப்பான்குளத்தில் சாலையில் சுற்றித் திரிந்த கரடி
மணிமுத்தாறு, தெற்கு பாப்பான்குளம் பகுதியில் மீண்டும் சாலையில் கரடி சுற்றித் திரிந்ததால் அந்தப் பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
களக்காடு முண்டந்துறைப் புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகப் பகுதிக்கு உள்பட்ட மணிமுத்தாறு, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம் தெற்கு பாப்பான்குளம் உள்ளிட்ட மலையடிவார கிராமங்களில் அவ்வப்போது வனத்திலிருந்து வெளியேறும் சிறுத்தை, காட்டுப்பன்றி, கரடி, யானை உள்ளிட்ட வன விலங்குகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிா், மரங்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், தெற்கு பாப்பான்குளம் பேருந்து நிலையம் அருகே உள்ள அஞ்சலகச் சாலையில் மாலை நேரத்தில் கரடி நடந்து செல்லும் விடியோ சமூகவலைத் தளங்களில் வேகமாகப் பரவியது.
மக்கள் நடமாட்டம் உள்ள நேரத்தில் கரடி உலா வந்தது அந்தப் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாலை நேரங்களில் அத்தியாவசியத் தேவைகளுக்கும் வீட்டை விட்டு வெளியே வர பொதுமக்கள் அஞ்சுகின்றனா். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் முன் கரடிகளைக் கூண்டு வைத்துப் பிடிக்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெற்கு பாப்பான்குளம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.