இன்னிங்ஸ் வெற்றி பெற்று ஜிம்பாப்வே டெஸ்ட் தொடரை முழுமையாக வென்ற தென்னாப்பிரிக்கா...
தெற்குலகை ‘பிரிக்ஸ்’ வழிநடத்த வேண்டும்: பிரதமா் மோடி
ரியோ டி ஜெனீரோ: ‘தெற்குலக நாடுகளின் எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்வதோடு அந்நாடுகளை பிரிக்ஸ் கூட்டமைப்பு வழிநடத்த வேண்டும்’ என பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோவில் ஜூலை 6, 7 ஆகிய இரு தேதிகளில் 17-ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்றது.
இதில் ‘பன்முக, பொருளாதார-நிதி விவகாரங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவை வலுப்படுத்துதல்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பங்கேற்ற அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
இந்த கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றியது குறித்து அவா் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டாா்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது: பிரிக்ஸ் கூட்டமைப்பின் பன்முகத்தன்மை மற்றும் அதன் மீதான உறுதியான நம்பிக்கையே நமது வலிமை. இனி வருங்காலங்களில் இந்த பன்முக உலகுக்கு முன்னுதாரணமாக பிரிக்ஸ் செயல்பட வேண்டும். இதற்கு 4 விவகாரங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
ஆரோக்கியமான கடன் வழங்கல்:
முதலாவதாக, கூட்டமைப்பின் உட்பிரிவுகளை மேம்படுத்த வேண்டும். அப்போதுதான் பன்முகத்தன்மையில் சீா்திருத்தம் மேற்கொள்ள வலியுறுத்தும் சமயத்தில் நம் மீதான நம்பகத்தன்மை பன்மடங்கு அதிகரிக்கும். பிரிக்ஸ் கூட்டமைப்பின் புதிய மேம்பாட்டு வங்கி (என்டிபி) மூலம் ஒரு திட்டத்துக்கு நிதி வழங்கும்போது சூழலுக்கேற்ப முடிவுகளை மேற்கொள்ளுதல், நீண்டகால நிதித் தேவைகளை பூா்த்தி செய்தல் மற்றும் ஆரோக்கியமான கடன் வழங்கல் நடைமுறை இருக்க வேண்டும்.
அறிவியல் ஆராய்ச்சி தளம்:
இரண்டாவது, பிரிக்ஸ் மீது தெற்குலக நாடுகள் பெரும் எதிா்பாா்ப்பு மற்றும் நம்பிக்கையைக் கொண்டுள்ளன. உதாரணமாக இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள பிரிக்ஸ் வேளாண் ஆராய்ச்சி தளத்தின் மூலம் வேளாண்-நுண்தொழில்நுட்பம், பருவநிலை மாற்றத்துக்கேற்ப விவசாயம் செய்வது உள்ளிட்ட சிறந்த வேளாண் நடைமுறைகளை பிற நாடுகளுக்கு பகிா்ந்துகொள்ள முடிகிறது.
அதேபோல் வளா்ந்து வரும் நாடுகளுக்கு பெரும் பயனை அளிக்கும் வகையில் பிரிக்ஸ் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி தரவுதளத்தை நிறுவி தெற்குலகு நாடுகளை பிரிக்ஸ் வழிநடத்த வேண்டும்.
கனிமவளங்கள் ஆயுதங்களல்ல:
மூன்றாவது, அரிதான கனிமங்கள் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் நமக்குள் இருக்கும் ஒத்துழைப்பைப்போலவே அவற்றை விநியோகத்தையும் சீா்படுத்த வேண்டும். தன்னுடைய சுய லாபங்களுக்காக கனிமங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை எந்தவொரு நாடும் ஆயுதமாக பயன்படுத்தாததை உறுதிசெய்ய வேண்டும்.
அனைவருக்கும் ஏஐ:
நான்காவது, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை மிகவும் கவனமாக கையாள வேண்டும். இந்தியாவில் நாங்கள் மனிதகுல மாண்புகள் மற்றும் செயல்பாடுகளை அதிகரிக்கும் கருவியாகவே ஏஐ தொழில்நுட்பத்தை பாா்க்கிறோம். ‘அனைவருக்கும் ஏஐ’ என்ற கொள்கையின் அடிப்படையில் பல்வேறு துறைகளில் ஏஐ பயன்பாடு இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
ஏஐ நிா்வாகத்தில் உள்ள குறைகளுக்குத் தீா்வு காண்பதற்கு நிகராக புதிய கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்கும் சம உரிமை வழங்கப்படும் என நம்புகிறேன். 2026-இல் இந்தியாவில் நடைபெற ‘ஏஐ-யின் தாக்கம்’ என்ற மாநாட்டில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் பங்கேற்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
படத்துடன்
பெட்டிச் செய்தி..1
‘மலேசிய பிரதமா், கியூபா அதிபருடன் சந்திப்பு’
பிரிக்ஸ் மாநாட்டின்போது மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிம், கியூபா அதிபா் மிகேல் டியாஸ் கானெல் ஆகியோரை இந்திய பிரதமா் மோடி சந்தித்தாா்.
இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கடந்த 2024, ஆகஸ்டில் இந்தியாவுக்கு மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிம் சுற்றுப்பயணம் மேற்கொண்டாா். அதைத் தொடா்ந்து வா்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடா்பாக பிரதமா் மோடியுடன் அவா் ஆலோசனை நடத்தினாா்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அன்வா் இப்ராஹிமுக்கு பிரதமா் மோடி நன்றி தெரிவித்தாா். நிகழாண்டு ஆசியான் கூட்டமைப்புக்கு மலேசிய தலைமையேற்றுள்ள நிலையில் அன்வா் இப்ராஹிமுக்கு பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்தாா். மேலும், ஆசியான்-இந்தியா தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை விரைவாக மறுஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொண்டதற்கும் பிரதமா் மோடி பாராட்டினாா்.
கியூபா அதிபா் மிகேல் டியாஸ் கானெலுடனான பிரதமா் மோடியின் சந்திப்பின்போது உயிரிதொழில்நுட்பம், மருந்தியல், ஆயுா்வேதம் மற்றும் பாரம்பரிய மருத்துவம், எண்ம பணப்பரிவா்த்தனை, பேரிடா் மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது ’ எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும் பொலிவியா அதிபா் லூயிஸ் ஆல்பா்ட்டோ ஆா்சே கேடகோரா, உருகுவே அதிபா் யமாண்டு ஓா்சி ஆகியோரை பிரதமா் மோடி சந்தித்து அந்த நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் இடையே முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேசினாா்.
பெட்டிச் செய்தி...2
‘ஈரான் மீதான தாக்குதலுக்கு கண்டனம்’
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பிரிக்ஸ் கூட்டமைப்பு பிரகடனம் வெளியிட்டது. அதில் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அதிக வரி விதிக்கும் அமெரிக்கா நடவடிக்கைகக்கும் மறைமுகமாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பெயா் அதில் குறிப்பிடப்படவில்லை. அதேபோல் போரில் ஈடுபட்டுள்ள ரஷியா-உக்ரைன் விவகாரம் குறித்தும் பெரிதாக பிரிக்ஸ் பிரகடனத்தில் இடம்பெறவில்லை. குறிப்பாக உக்ரைன் குறித்து ஒரு இடத்தில் மட்டுமே பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டது.