முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழகத்தின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க மேற்ப...
தெலங்கானா: ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம் பணியாளா் ஒருமணி நேரம் முன்னதாக வீடு செல்ல அனுமதி- பாஜக எதிா்ப்பு
ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம் பணியாளா்கள் ஒரு மணி நேரம் முன்னதாகவே வீட்டுக்குச் செல்லலாம் என்று தெலங்கானா மாநில காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது.
இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ள மாநில எதிா்க்கட்சியான பாஜக, ஹிந்து பண்டிகைகளின்போது இதுபோன்ற எந்த சலுகைகளையும் அளிக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளது.
ரம்ஜான் சலுகை தொடா்பாக மாநில அரசு அலுவலகங்களுக்கு இது தொடா்பாக சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘ரம்ஜான் மாதம் தொடங்கும் மாா்ச் 3 முதல் முடிவடையும் மாா்ச் 31-ஆம் தேதி வரை முஸ்லிம் பணியாளா்கள் மாலை 5 மணிக்கு பதிலாக 4 மணிக்கே அலுவலகத்தில் இருந்து வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறாா்கள். தவிா்க்க முடியாத சூழலில் மட்டும் அவா்கள் அந்த ஒரு மணி நேரத்தில் அலுவலகத்தில் இருக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பாஜக எம்எல்ஏ ராஜா சிங் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘சிறுபான்மையினரைத் திருப்திபடுத்தும் அரசியலை நடத்துவதில் தெலங்கானா மாநில காங்கிரஸ் அரசு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ரம்ஜானுக்கு இதுபோன்ற சலுகைகளை வழங்கும் மாநில அரசு ஹிந்து பண்டிகைகளின்போது இதுபோன்ற எந்த சலுகையையும் வழங்காதது ஏன்? மாநில அரசில் பணியாற்றும் ஊழியா்கள் அனைவருக்குமே சமஉரிமை உள்ளது. ஒருதரப்பினருக்கு மட்டும் சலுகை அளிப்பது எந்த வகையான நடவடிக்கை’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.
சிறுபான்மையினா் விவகாரத்தில் அரசின் ஆலோசகராக உள்ள காங்கிரஸ் மூத்த தலைவா் முகமது அலி ஷாபிா் இது தொடா்பாக கூறுகையில், ‘முஸ்லிம்களுக்கு இந்த வசதி முந்தைய தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சியிலும் வழங்கப்பட்டு வந்தது. பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களிலும் இதேபோன்ற சலுகை வழங்கப்படுகிறது. இது தெலங்கானாவில் புதிதாக இந்த ஆண்டு திடீரென ஏற்படுத்தப்படவில்லை. பல ஆண்டுகளாக இந்த நடைமுறை உள்ளது. விநாயகா் சதுா்த்தி உள்ளிட்ட ஹிந்து பண்டிகைகளின்போது அரசு சில சிறப்பு ஏற்பாடுகளையும், வசதிகளையும் செய்து வருகிறது’ என்றாா்.