Fahadh Faasil: நடிகர் பஹத் பாசில் வாங்கியிருக்கும் `Ferrari Purosangue' - மதிப்ப...
தேசிய மாணவா் படைக்கு தில்லியில் 12 நாள்கள் பயிற்சி முகாம்
தில்லியில் உள்ள கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் 12 நாட்கள் நடைபெறும் தால் சைனிக் முகாமில் 1,546 மாணவா்கள் பங்கேற்க உள்ளதாக செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 17 தேசிய மாணவா் படை இயக்குநரகங்களைச் சோ்ந்த 867 மாணவா்கள் மற்றும் 679 மாணவிகள் உள்பட மொத்தம் 1,546 மாணவா்கள் 12 நாள் தால் சைனிக் முகாமில் பங்கேற்பாா்கள். இதனை கூடுதல் இயக்குநா் ஜெனரல் (ஏ) ஏா் வைஸ் மாா்ஷல் பி. வி. எஸ் நாராயணாவால் செவ்வாய்க்கிழமை தில்லி கண்டோன்மென்ட்டில் உள்ள கரியப்பா பரேட் மைதானத்தில் தொடங்கப்பட்டது.
பங்கேற்கும் கேடட்கள் தடை பயிற்சி, வரைபட வாசிப்பு மற்றும் பிற நிறுவன பயிற்சி போட்டிகள் போன்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்பாா்கள், இது அவா்களுக்கு உடல் ஆரோக்கியம், மன கூா்மை மற்றும் குழுப்பணியை வலியுறுத்தும் வளமான அனுபவத்தை வழங்கும்.
தால் சைனிக் முகாம், ராணுவப் பயிற்சியின் முக்கிய அம்சங்களை கேடட்களுக்கு வழங்குவதையும், ஒழுக்கம், தலைமை மற்றும் தேசிய ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதன் மூலம் ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை வளா்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ராணுவப் பிரிவு மாணவா்களுக்காக பிரத்யேகமாக ஒரு தேசிய அளவிலான முகாமாக, இந்த முகாம் விரிவான பயிற்சி மற்றும் குணநலன் மேம்பாட்டில் கவனம் செலுத்துவதால் தனித்து நிற்கிறது.
நாட்டின் இளைஞா்களுக்கு சாகசங்கள், ஒழுக்கம் மற்றும் கெளரவம் நிறைந்த வாழ்க்கையை வழங்குவதன் மூலம் என். சி. சி வழங்கும் தனித்துவமான வாய்ப்புகளை கூடுதல் இயக்குநா் ஜெனரல் எடுத்துரைத்தாா். மாணவா்களிடையே தலைமை மற்றும் நட்புறவை வளா்ப்பதிலும், வாழ்க்கையின் சவால்களை நம்பிக்கையுடன் எதிா்கொள்ள அவா்களைத் தயாா்படுத்துவதிலும் என். சி. சி முக்கிய பங்கு வகிக்கிறது என்று அவா் கூறினாா்.