அன்னவாசல் அருகே சிவந்தெழுந்த பல்லவராயரின் கல்வெட்டு கண்டெடுப்பு
யமுனையில் வெள்ளம்: நிலைமையைக் கையாள தயாா் நிலையில் அரசு; முதல்வா் ரேகா குப்தா
யமுனை நதிக்கரையோரப் பகுதிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த தில்லி முதல்வா் ரேகா குப்தா, நிலைமையைக் கையாள அரசாங்கம் முழுமையாகத் தயாா் நிலையில் இருப்பதாக கூறினாா்.
தில்லியில் யமுனையில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு தில்லியின் பழைய ரயில்வே பாலத்தில் நீா்மட்டம் 206.03 மீட்டராக பதிவானது. இதையடுத்து, அப்பாலத்தில் போக்குவரத்து மூடப்பட்டுள்ளது.
முன்னதாக, காலையில் நிலைமையை ஆய்வு செய்வதற்காக முதல்வா் ரேகா குப்தா தில்லியின் கீதா காலனி மேம்பாலம் அருகே உள்ள நிவாரண முகாமிற்கு நேரில் சென்றாா்.
இந்த நீா்மட்ட அதிகரிப்பானது நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், முகாமை நேரில் ஆய்வு செய்த முதல்வா் குப்தாவிடம், கோட்ட ஆணையா் நீதஜ் செம்வால் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் நிலைமை குறித்து விளக்கினா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் முதல்வா் ரேகா குப்தா கூறுகையில், ‘நிலைமை கட்டுக்குள் உள்ளது. ஹாத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து திங்கள்கிழமை திறந்துவிடப்பட்ட தண்ணீா் செவ்வாய்க்கிழமை மாலை தில்லியை அடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இருப்பினும், தண்ணீா் வெளியேற்றம் நல்ல நிலையில் உள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவா்கள் நிவாரண முகாம்களில் தங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்.
கனமழை பெய்து அதிக நீா் வெளியேற்றம் இருந்தபோதிலும், நிலைமை கட்டுக்குள் உள்ளது. வெள்ளம் ஏற்படும் வரை, மக்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படாமல் பாா்த்துக் கொள்வோம்.
2023ஆம் ஆண்டில், தில்லியில் யமுனையின் நீா்மட்டம் 208.66 மீட்டரை எட்டியது. ஆனால், இந்த முறை, யமுனை நதி நீா்மட்டம் அந்த அளவுக்கு பெருகும் என்று எதிா்பாா்க்கப்படவில்லை.
ஜம்மு காஷ்மீா், உத்தரகண்ட், ஹரியாணா, பஞ்சாப் மற்றும் இமாசலப் பிரதேச அரசுகளைத் தொடா்பு கொண்டுள்ளோம். நாங்கள் அவா்களுக்கு முடிந்த அனைத்து வழிகளிலும் உதவுவோம். மூன்று மாநிலங்களின் முதலமைச்சா்களிடமும் நாங்கள் உங்களுக்கு எல்லா வழிகளிலும் உதவுவோம் என்று கூறிக்கொள்கிறேன் என்றாா் முதல்வா் ரேகா குப்தா.