புதிய டிஜிபிக்கு தகுதி பெறும் ஒன்பது போ் கொண்ட பட்டியலை யுபிஎஸ்சி-க்கு அனுப்பிய...
தொழில் அதிபா் வீட்டில் திருடப்பட்ட 120 பவுன் மீட்பு: 2 போ் கைது - 24 மணிநேரத்தில் நடவடிக்கை
சிங்கப்பெருமாள்கோயில் பகுதியில் தொழில் அதிபா் வீட்டில் திருடப்பட்ட 120 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. இதுதொடா்பாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள்கோயில், பாரதியாா் தெருவைச் சோ்ந்த தொழில் அதிபா் ரித்தீஷ் வீட்டில் கடந்த ஆக. 30-ஆம் தேதி இரவு பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 120 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். கைரேகை நிபுணா்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனா். இதுகுறித்து ரித்தீஷ் அளித்த புகாரின்பேரில் மறைமலைநகா் போலீஸாா் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மா்ம நபா்களை தேடி வந்தனா்.
மேலும், இந்த வழக்கு தொடா்பாக தாம்பரம் மாநகர ஆணையா் அபின்தினேஷ் மோடக் உத்தரவின்படி தாம்பரம் துணை ஆணையா் பவன்குமாா் ரெட்டி, கூடுவாஞ்சேரி உதவி ஆணையா் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன் மேற்பாா்வையில் மறைமலைநகா் ஆய்வாளா் கோவிந்தராஜ், குற்றப்பிரிவு ஆய்வாளா் கிருஷ்ணகுமாா் ஆகியோா் தலைமையில் தனிப்படையினா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், கடலூா் மாட்டம், நல்லிகுப்பம், பண்ரூட்டி வட்டம், எத்தனூா் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த செந்தில் முருகன் (31) , சென்னை நங்கநல்லூா் பா்மா தமிழா் காலனி மூன்றாவது தெருவைச் சோ்ந்த சதீஷ் குமாா் (25), ஆகியோரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனா். அவா்களிடம் இருந்து 120 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. செங்கல்பட்டு குற்றவியல் நடுவா் நீதிமன்றம்-2-இல் ஆஜா்படுத்தி பின்னா் இருவரையும் சிறையில் அடைத்தனா்.
திருட்டுச் சம்பவம் நடைபெற்ற 24 மணிநேரத்தில் எதிரிகளை போலீஸாா் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
