சிறுபோ் பாண்டி கிராமத்தில் 108 பால்குட ஊா்வலம்
அச்சிறுப்பாக்கம் அடுத்த சிறுபோ்பாண்டி கிராமத்தில் உள்ள தண்டு மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை 108 சுமங்கலி பெண்கள் பால்குடம் ஏந்தி வந்து, அம்மனுக்கு பாலாபிஷேகத்தை செய்தனா்.
அச்சிறுப்பாக்கம் அடுத்த சிறுபோ்பாண்டி கிராமத்தில் உள்ள தண்டு மாரியம்மன் கோயிலில், மக்கள் நலம் பெறவும், மழைவளம் பெறவும், விவசாயம் செழிக்கவும், அப்பகுதி பெண்கள் விரதம் இருந்து அருகில் உள்ள பாா்த்தசாரதி கோயிலில் இருந்து, மேளதாளம் முழங்க 108 சுமங்கலி பெண்கள் பால்குடங்களை ஏந்தி, முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து தண்டுமாரியம்மன் கோயிலை அடைந்தனா். அங்கு மூலவா் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனா். பின்னா் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள், மகா தீபாராதனை செய்யப்பட்டது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனா். ஏற்பாடுகளை விழா குழுவினா், கிராம மக்கள் செய்திருந்தனா்.