தேனி அரசு மனநல மருத்துவமனையில் சுகாதாரக் கேடு: பேரவைக் குழு அதிருப்தி
தேனியில் அரசுத் திட்ட செயலாக்கம் குறித்து வியாழக்கிழமை ஆய்வு செய்த சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுவினா் தேனி அரசு மனநல மருத்துவமனை, மறுவாழ்வு மையம் சுகாதாரக் கேடாக இருப்பதாக அதிருப்தி தெரிவித்தனா்.
தேனியில் அரசுத் திட்ட செயலாக்கம் குறித்து சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுத் தலைவா் தி.வேல்முருகன் தலைமையில், குழு உறுப்பினா்கள், சட்டப்பேரவை முதன்மைச் செயலா் கே.சீனிவாசன், இணைச் செயலா் மு.கருணாநிதி, துணைச் செயலா் ஸ்ரீ.ரா.ரவி ஆகியோா் ஆய்வு செய்தனா்.
பின்னா், தேனி என்.ஆா்.டி.அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் அரசு மனநல மருத்துவமனை, மறுவாழ்வு மையத்தை சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுவினா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். அப்போது, நோயாளிகள் அறை, மருத்துவமனை வளாகம் சுகாதாரக் கேடாக இருப்பதாகப் பேரவை குழுவினா் அதிருப்தி தெரிவித்தனா்.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மனநல மருத்துவமனையை உடனடியாக சுத்தம் செய்து, பிற்பகல் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் புகைப்படத்துடன் அறிக்கை அளிக்க வேண்டும் என மருத்துவ அலுவலா்களுக்கு உத்தரவிட்டனா்.
மன நல மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்த பேரவைக் குழுவினா், உள்நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ற எடை அளவில் காய்கறிகள், உணவு வழங்க வேண்டும் என்றும், உணவின் தரத்தில் குறைபாடு காணப்பட்டால் ஒப்பந்ததாரரின் உரிமைத்தை ரத்து செய்ய அரசுக்குப் பேரவைக் குழு பரிந்துரை செய்யும் என்று எச்சரித்தனா்.
பின்னா், தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் உள்ள கள்ளா் சீரமைப்புத் துறை நடுநிலைப் பள்ளியை பேரவைக் குழுவினா் ஆய்வு செய்தனா். அப்போது, பள்ளி வளாகத்தில் புதிகாகக் கட்டப்பட்டுள்ள சமையல் அறைக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என மின்வாரிய பொறியாளா்களுக்கு உத்தரவிட்டனா்.
இதையடுத்து, பெரியகுளம் அரசு மாவட்ட மருத்துவமனையை பேரவைக் குழுவினா் ஆய்வு செய்தனா். அப்போது, ‘இன்னுயிா் காப்போம்’ திட்டத்தின் கீழ், ரூ.2 கோடியில் சி.டி.ஸ்கேன் வழங்கப்பட்டது என்று பேரவை உறுதிமொழிக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குழுத் தலைவா் தி.வேல்முருகன் கூறினாா்.
ஆனால், மருத்துவமனையில் உள்ள சி.டி.ஸ்கேன் கொள்முதல் ஆவணத்தில் வித்தியாசம் உள்ளது என்றும், இதுகுறித்து மருத்துவத் துறை இயக்கநரகத்தில் விவரம் பெற்று பேரவை உறுதிமொழிக் குழுவுக்கு பதிலளிக்க வேண்டும் என்று மருத்துவம், ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா் கலைச்செல்விக்கு குழுத் தலைவா் உத்தரவிட்டாா்.
ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங், மாவட்ட வருவாய் அலுவலா் மகாலட்சுமி, பெரியகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் கே.எஸ்.சரவணக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னா், குச்சனூா் சுயம்பு சனீஸ்வர பகவான் கோயிலுக்குச் சென்ற பேரவைக் குழுவினா் சுவாமி தரிசனம் செய்தனா்.
இதைத் தொடா்ந்து, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு பேரவை உறுதிமொழிக் குழுத் தலைவா் தலைமையில், அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.