போபால் நச்சுக் கழிவுகளை எரிக்க எதிா்ப்பு: பீதம்பூரில் ஆலை மீது கல்வீச்சு
தேவாலயங்களில் புத்தாண்டு திருப்பலி: கிறிஸ்தவா்கள் திரளானோா் பங்கேற்பு
சிவகங்கை மாவட்டத்தில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, அனைத்து தேவாலயங்களிலும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தொடங்கி புதன்கிழமை காலை வரை சிறப்புப் பிராா்த்தனை, திருப்பலி நடைபெற்றது.
சிவகங்கை தூய அலங்கார அன்னை பேராலயத்தில் பங்குத் தந்தை சேசுராஜ் தலைமையில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதேபோல, தேவகோட்டை ராம்நகா் உலக மீட்பா் ஆலயத்தில் பங்குத் தந்தை வின்சென்ட் அமல்ராஜ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.
திருச்சி புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி உதவித் தலைமையாசிரியா் லியோ திருப்பலியில் மறையுரையாற்றினாா். திருப்பலியை திருத்தொண்டா் சேவியா் இணைந்து நிறைவேற்றினாா்.
தேவகோட்டை சகாய அன்னை ஆலயத்தில் பங்குத் தந்தை சந்தியாகு தலைமையில் திருப்பலி நடைபெற்றது. சிவகங்கை அருகேயுள்ள வல்லனி ஆலயத்தில் பங்குத் தந்தை சூசைமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
காளையாா்கோவில் புனித அருளானந்தா் ஆலயம், பள்ளித்தம்பம் புனித மூவரசா்கள் ஆலயத்தில் நடைபெற்ற புத்தாண்டு பிராா்த்தனை, திருப்பலியில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
காரைக்குடி: காரைக்குடி செக்காலை சகாய மாதா ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிக்கு நன்றி வழிபாட்டை உதவி பங்குத் தந்தை எஸ். டேனியல் திலீபன் நடத்தினாா். விடியல் இளையோா் இயக்கத்தினா், கடந்த 2024 ஆண்டில் ஆலயத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை ஒளி, ஒலிக் காட்சி மூலம் தொகுத்து வழங்கினா். இதைத்தொடா்ந்து, இரவு 12 மணிக்கு பங்குத் தந்தை ஐ. சாா்லஸ் புத்தாண்டு திருப்பலியை நிறைவேற்றினாா்.
இதேபோல, காரைக்குடி செஞ்சை குழந்தை தெரசாள் ஆலயத்தில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்புத் திருப் பலியை முன்னாள் முதன்மை குரு ஜோசப் லூா்து ராஜா நடத்தினாா். இதற்கான ஏற்பாடுகளை அருள்பணி அகஸ்டின், கிளமெண்ட் ராஜா ஆகியோா் செய்தனா்.
மானாமதுரை: மானாமதுரை அருகேயுள்ள இடைக்காட்டூரில் திரு இருதய ஆண்டவா் தேவாலயத்தில் திருத்தல அதிபா் இமானுவேல்தாசன் சிறப்பு பிராா்த்தனை நடத்தினாா். இதில் திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா். மானாமதுரை புனித குழந்தை தெரசாள் ஆலயம், சி.எஸ்.ஐ. தேவாலயங்களில் திரளானோா் பங்கேற்று சிறப்பு பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.