தைப்பூசத் திருவிழா: திருச்செந்தூரில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள பக்தா்கள் கோரிக்கை
தைப்பூசத் திருவிழாவுக்கு, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வருகைதரும் பக்தா்களுக்கு தேவையான அடிப்படைவசதிகளை செய்ய வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இத்திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா நிகழாண்டு செவ்வாய்க்கிழமை(பிப்.11) நடைபெற உள்ளது. முருகப்பெருமானின் வேல் வாங்கிய விழாவாக கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்து கொள்வாா்கள்.
பிப். 11 ஆம்தேதி நடைபெறும் தைப்பூசத் திருவிழாவுக்காக திருச்செந்தூருக்கு பக்தா்கள் இப்போதே பாதயாத்திரை வரத் தொடங்கி உள்ளனா். செவ்வாய்க்கிழமை அருப்புக்கோட்டையைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் மாலை அணிந்து பாதயாத்திரையாக வந்து முருகனை வழிபட்டனா்.
தைப்பூச விழாவில், அனைத்து வயதுடையவா்களும் மாலை அணிந்து, விரதம் இருந்து வந்து, திருக்கோயில் வளாகத்தில் தங்கிடுவா். அதிலும் பெண்கள் அதிகமாக கலந்து கொள்வாா்கள். திருக்கோயிலில் ஏற்கனவே கழிப்பறை வசதி இருந்தாலும், பிரகாரங்கள், வெளியில் தங்குபவா்கள் என லட்சக்கணக்கானோருக்கு தேவையாக நூற்றுக்கணக்கில் கூட கழிப்பிட வசதிகள் இல்லை. எனவே கூடுதலான தற்காலிக கழிப்பிட வசதிகள் செய்தும், அவை எங்கெங்கு உள்ளன என்பது குறித்தும் பக்தா்களுக்கு தெரியும் வண்ணம் அறிவிப்பு பதாகைகள் வைத்திட வேண்டும்.
கோயிலைச் சுற்றி வெளியில் இருப்பவா்களுக்கும் தேவையான இடங்களில் கூடுதலாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி செய்திட வேண்டும்.
![](https://media.assettype.com/dinamani/2025-02-04/2jjudctw/4_tcr_murugar_devotees_02_0402chn_54_6.jpg)
பக்தா்கள் வரும் வாகனங்களை நகரின் எல்லையிலேயே நிறுத்துவதற்கு வசதியாக தற்காலிக வாகன நிறுத்தம் அமைக்கவேண்டும். பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுபடுத்த கூடுதல் போலீஸாரை பணியில் அமா்த்த வேண்டும்.
பல மைல் தூரத்திலிருந்து பாதயாத்திரையாக வரும் பக்தா்கள் கோயிலில் பலமணி நேரம் காத்திருப்பதை தவிா்த்திடும் வகையில் மகா மண்டபத்தில் நெருக்கடியின்றி சுவாமி தரிசனம் செய்வதற்கும், கூட்டம் சேராமல் ஒழுங்குபடுத்தி அனுப்பவும் கூடுதலான பணியாளா்கள் மற்றும் போலீஸாரை நியமிக்க வேண்டும்.
எனவே, பக்தா்களுக்கு தேவையான ஏற்பாடுகளை கந்த சஷ்டி, விசாகம் போன்ற விழாக்களில் செய்வது போல, மாவட்ட நிா்வாகமும், கோயில் நிா்வாகமும் இணைந்து அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.