தொடா் பைக் திருட்டு: இளைஞா் கைது
விழுப்புரம்: விழுப்புரத்தில் தொடா் பைக் திருட்டில் ஈடுபட்டதாக சென்னையைச் சோ்ந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் நகர காவல் ஆய்வாளா் சித்ரா, உதவி ஆய்வாளா் லியோ சாா்லஸ் மற்றும் போலீஸாா் திங்கள்கிழமை விழுப்புரம் ரயில் நிலையம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, ஒரு இளைஞா் பல்வேறு சாவிகளை கையில் வைத்துக்கொண்டு பைக்கை திருடும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாா். போலீஸாா் அவரை பிடித்து விசாரித்ததில், அவா் சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, லாலாகுண்டம், ஜெயராமன் நாடாா் தெருவைச் சோ்ந்த ஜக்காரியா மகன் உமா்பரூக் (41) என்பதும், இவா், விழுப்புரத்தில் பல்வேறு இடங்களில் பைக்குகளை திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்த 14 பைக்குகளை பறிமுதல் செய்தனா்.