தொடா் விடுமுறை நிறைவு: சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல்
தொடா் விடுமுறை நிறைவடைந்த நிலையில், சென்னை நோக்கிச் சென்ற வாகனங்களால் விழுப்புரம் - சென்னை நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் உளுந்தூா்பேட்டை, விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி, ஆத்தூா் சுங்கச்சாவடிகளில் நீண்ட தொலைவுக்கு வாகனங்கள்அணிவகுத்து நின்றன.
ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினம், 16-ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி என தொடா்ந்து அரசு விடுமுறை, வழக்கமான ஞாயிறு விடுமுறை தொடா்ந்து வந்த நிலையில், வெளியூா்களிலிருந்து சென்னைக்குச் சென்று பணியாற்றுபவா்கள், மத்திய மற்றும் தென் மாவட்டங்களிலுள்ள தங்கள் சொந்த ஊா்களுக்கு கடந்த 14-ஆம் தேதி மாலை முதலே செல்லத் தொடங்கினா். ஞாயிற்றுக்கிழமை தொடா் விடுமுறை நிறைவடைந்த நிலையில், மீண்டும் அவா்கள் சென்னை நோக்கி பயணிக்கத் தொடங்கினா்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகரிக்கத் தொடங்கியது. மாலையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. மாலை 6 மணிக்கு மேல் விழுப்புரம் நகரிலும், பிற பகுதிகளிலும் மழை பெய்யத் தொடங்கியதால் வாகனங்கள் மெதுவாக செல்லத் தொடங்கின.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை சுங்கச்சாவடி பகுதியிலிருந்து சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதைத் தொடா்ந்து, சுங்கச்சாவடியின் அனைத்து உள்நுழைவுப் பகுதிகளும் திறக்கப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.
50 ஆயிரம் வாகனங்கள்: விக்கிரவாண்டி சுங்கச்சாவடி வழியாக ஆகஸ்ட் 16-ஆம் தேதி சுமாா் 31 ஆயிரம் வாகனங்கள் சென்னையை நோக்கிச் சென்ற நிலையில், 17-ஆம் தேதி மாலை வரை சுமாா் 34 ஆயிரம் வாகனங்கள் சென்றன. இந்த எண்ணிக்கை இரவுக்குள் 50 ஆயிரத்தை கடந்துவிடும் என்றும் சுங்கச்சாவடி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சுங்கச்சாவடியில் அனைத்து உள்நுழைவுப் பகுதிகளும் திறக்கப்பட்டதால், வாகனங்கள் விரைந்து சென்றன. இதுபோல, ஆத்தூா் சுங்கச்சாவடியிலும் வாகனங்கள் கடந்து சென்றன.
200 போலீஸாா் பாதுகாப்பு: விழுப்புரம் மாவட்ட எல்லை தொடக்கத்திலிருந்து நிறைவு பகுதி வரையில் முக்கிய சாலைப் பகுதிகள், மேம்பாலப் பணிகள் நடைபெறும் பகுதிகளில் போலீஸாா் போக்குவரத்தை சரிசெய்தல் மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். சுமாா் 200 போ் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.